நானே பலிகடா ஆகிறேன் – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசைக் கலை நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார். சரியான ஏற்பாடுகளைச் செய்யாமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலரும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மூச்சு விட கூட முடியாத நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் அச்சத்தில் திரும்பி சென்றனர். இந்த நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் இந்த நிகழ்ச்சி பற்றி தங்களது வேதனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ‛‛அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வாங்கி, தவிர்க்க முடியாத சூழலால் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனவர்கள், உங்களது டிக்கெட் காப்பியையும் உங்களது குறையையும் அனுப்பி வைக்கவும். எங்களது குழுவினர் உடனடியாக பதில் கொடுப்பார்கள்,” என ரஹ்மான் பதிவிட்டார்.

அதோடு, ‛‛என்னை சிலர் ஆடு என்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ள இந்த முறை நானே பலியாடு ஆகி உள்ளேன். இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனையடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்ப வரும் காலங்களில் சென்னையில் உலகத் தர கட்டமைப்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்டவை சிறந்து விளங்க வாய்ப்புகளை வழங்க வேண்டும். போக்குவரத்து, கூட்ட நெரிசலுக்கான மேலாண்மை, விதிகளை பின்பற்றும் ரசிகர்கள் அமைய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும்'' என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.