பிரேசிலில் புயலில் வீடுகள் இடிந்து 44 பேர் பலி: பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு

பிரேசிலியா,

பிரேசிலின் தெற்கு பகுதியில் கடுமையான வெப்ப மண்டல புயல் தாக்கியது. இதனால் அங்கு கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதில் கரையோர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

பயங்கர நிலச்சரிவு

இதன் தொடர்ச்சியாக ரியோ கிராண்டே டோ சுல், கேடரினா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அர்ஜென்டினா மற்றும் உருகுவே எல்லையில் உள்ள சுமார் 60 நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் பல நகரங்கள் இருளில் மூழ்கின. மேலும் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

14 ஆயிரம் பேர் வெளியேற்றம்

புயல் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்து 44 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 224 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நிவாரணம் அறிவிப்பு

இதற்கிடையே இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா புயலால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

எனவே அந்த நாட்டின் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் புயல் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தகுந்த நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.