புதுடில்லி, மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறவும், வேலை வாய்ப்புகளை கண்டறியவும் உதவி செய்யும், ‘பி.எம்., தக் ஷ்’ என்ற இணையதளத்தை மத்திய அரசு நேற்று துவங்கியது.
மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, மத்திய அரசு ஏற்கனவே அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் வாயிலாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த பயிற்சியில் இதுவரை 1.32 லட்சம் பயனாளர்கள் பதிவு செய்து பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கான பயிற்சிக்காக, 2016 – 17 முதல் 2022 – 23 வரையிலான காலக்கட்டத்தில் அரசு, 137.53 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, பயிற்சி பெறுவோர் சந்திக்கும் சவால்கள், சந்தை தொடர்பான படிப்புகளுக்கான தேவையை உணர்ந்து, ‘பி.எம்., தக் ஷ்’ என்ற இணையதளத்தை மத்திய அரசு நேற்று துவங்கியது.
இந்த இணையதளத்தில், 250க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் இருந்து தேவையும், ஆர்வமும் உள்ள துறையில் படிப்பை தேர்ந்தெடுத்து, மாற்றுத் திறனாளிகள் பயிற்சி பெற முடியும்.
பயிற்சி முடித்த பின், வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களையும் இந்த இணையதளம் வாயிலாக பயனாளர்கள் விண்ணப்பித்து வேலை பெற முடியும்.
இந்த இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் நேற்று துவக்கி வைத்தார். வரும் தீபாவளி பண்டிகைக்குள் 25,000 வேலைக்கான விபரங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement