புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஏற்றிச்செல்ல வந்த மாற்று விமானம் எதிர்பாரத விதமாக லண்டனுக்கு திசைத் திருப்பி விடப்பட்டதாக சிபிசி செய்தி கூறியுள்ளது. இதனால் அவர் டெல்லியில் இருந்து புறப்படுவது மேலும் தாமதமாகிறது.
இந்தியா தலைமையேற்று நடந்திய ஜி20 உச்சி மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மகன் சேவியருடன் செப்.8 ஆம் தேதி இந்தியா வந்தார். உச்சி மாநாடு முடிந்ததும் ஜஸ்டின் ட்ரூடோ ஞாயிற்றுக்கிழமை கனடா திரும்புவதாக இருந்தது. ஆனால் அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் இந்தியாவில் தங்க நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்காக அனுப்பப்பட்ட மாற்று விமானம் லண்டனுக்கு திசைமாற்றி விடப்பட்டிருக்கிறது என்று சிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்செய்திநிறுனம், ” புதுடெல்லிக்கு அனுப்பப்பட்ட ராயல் கனேடியன் விமானப்படையின் சிசி-150 போலரைஸ் விமானம் லண்டனுக்கு திசைமாற்றி விடப்பட்டிருக்கிறது. முறையாக அந்த விமானம் ரோம் வழியாக வந்திருக்க வேண்டும். இந்த திசைமாற்றலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சிசி 150 போலரைஸ் விமானம் லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை (உள்ளூர் நேரப்படி) புறப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிப்பதாக கூறியுள்ளது. மேலும், பின்னடைவு நடவடிக்கைக் காரணமாக, மாற்றுபாகங்களுடன் தொழில்நுட்ப வல்லுநரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்தி வரும் விமானம் 36 ஆண்டுகள் பழமையானது. அவ்விமானத்தில் இதற்கு முன்பும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெல்ஜியத்துக்கு கிளம்பிய அரைமணி நேரத்தில் அவ்விமானம் ஒட்டோவாவுக்கு திருப்பப்பட்டது. 16 மாதங்கள் சேவையில் இல்லாத இந்த விமானம் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது மீண்டும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில், ட்ரூடோவின் முக்கிய எதிரணியான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Pierre Poilievre இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பெடரல் விமான நிலையங்களை தவறாககையாண்டதன் காரணமாக கன்னடியர்கள் மீது ட்ரூடோ திணித்து வந்த விமான தாமதத்தை தற்போது அவரே அனுபவிக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.