வாடகை கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தம்: பஸ்சில் பயணம் செய்த அனில் கும்ப்ளே 'எக்ஸ்' தளத்தில் பதிவு

பெங்களூரு

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனை கண்டித்தும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நிவாரணம் வழங்க கோரி நேற்று பெங்களூருவில் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம், ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து வீடுகள், அலுவலகங்களுக்கு செல்லமுடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளேவும் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது டெல்லியில் இருந்து விமானத்தில் பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு நேற்று காலை அனில் கும்ப்ளே வந்துள்ளார். அங்கிருந்து அவர் பெங்களூரு பனசங்கரியில் உள்ள தனது வீட்டுக்கு வாடகை காரில் செல்ல முயன்றார். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தால் வாடகை கார்கள் நேற்று ஓடவில்லை.

இதையடுத்து அவர் தேவனஹள்ளி விமான நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பனசங்கரிக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பயணம் செய்து வீட்டுக்கு சென்றுள்ளார். பஸ்சில் பயணம் செய்தபோது அனில் கும்ப்ளே தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, நான் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு மாநகர பஸ்சில் சென்றேன் என பதிவிட்டு இருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.