ஏ.ஆர்.ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் இசைக்கச்சேரியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மழை காரணமாக அன்று இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனதால் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் அந்த இசைக்கச்சேரி நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு பல்வேறு குளறுபடிகள் நடந்ததால் பெரும் பேசு பொருளானது. பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை குற்றம்சாட்டி வந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சமூக வலைதளங்களில் விளக்கங்களை அளித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தியும் ரஹ்மானுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் “மூன்று தசாப்தங்களாக நமக்கு ரஹ்மான் சாரைத் தெரியும். கான்சர்ட் அன்று நடந்த சம்பவங்கள் அவரை மிகவும் பாதித்திருக்கும்.
அன்று அந்த களேபரங்களுக்கு நடுவில் என் குடும்பமும் அங்குதான் இருந்தது. இந்த நேரத்தில் ரஹ்மானுக்கு துணை நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் முழு பொறுப்பையும் ஏற்பார்கள் என நம்புகிறேன். வெறுப்பை கைவிட்டு அன்பை மட்டும் ரசிகர்கள் தேர்வு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு தனது ஆதரவை கார்த்தி தெரிவித்திருக்கிறார்.