IND vs SL: பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்த இந்திய அணி

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி இன்னும் முழுதாக 16 மணி நேரம் கூட ஆகாத நிலையில், உடனடியாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி களம் கண்டிருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய வீரர்களில் ஷர்துல் தாக்கூரை தவிர மற்ற 10 பேரும் களம் காண்கின்றனர். அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்சர் படேல் களம் கண்டிருக்கிறார்.

இந்திய அணி அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு, ரிசர்வ் நாளான நேற்று போட்டி முழுமையாக நடைபெற்றது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அரைசதம் அடித்து வலுவான தொடக்கத்தைக் கொடுக்க, மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நங்கூரம் போல் நிலைத்து நின்று சதம் விளாசிவிட்டனர். மேலும், கடைசி வரை ஆட்டம் இழக்கவே இல்லை. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. 

இலங்கை அணியுடன் மோதல்

ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடுகிறது. நேற்றைய போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல், பும்ரா உள்ளிட்டோருக்கு இன்று ஓய்வு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. ஷர்துல் தாக்கூர் மட்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டு அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். 

இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷானகா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக (c), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, மதீஷ பத்திரன

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.