புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் சந்திரயான் ஆரோக்கிய திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: “புதுச்சேரியில் உள்ளவர்கள் நீடூழி வாழும் வகையில் மருத்துவத்துறையின் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமர் கொண்டுவந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்காக என்றும் நான் நன்றியுடன் இருப்பேன்.
மருத்துவத் துறையை மேம்படுத்த மாதம் 2 நாட்கள் 3 மணி நேரம் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறேன். காசநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்க வீடு, வீடாகச் சென்று பரிசோதனை நடத்தியுள்ளனர். ரூ.84 லட்சத்தில் உடனடியாக எக்ஸ்ரே எடுக்கும் கருவி இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் பயன்படுத்தப்படுகிறது.
புதுச்சேரி மருத்துவமனைகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக்கூடாது. தென்னிந்தியாவிலேயே புதுச்சேரி மருத்துவ கேந்திரமாக உருவாகி வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்த 128 பேர் புதுச்சேரியில் இத்திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். புதுச்சேரி மருத்துவத்துறையில் முன்னேறி வருகிறது. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 10 சதவீதம் இடஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை வழங்கப்படுகிறது.
புதுச்சேரியில் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை 75 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் 63 லட்சம் பெண்கள் உதவித்தொகை விண்ணப்பத்திலிருந்து நிராகரிக்கப்பட்டுள்ளனர். நான் தமிழகத்தைச் சேர்ந்தவள். எனவே தமிழகத்தைப் பற்றி பேசுகிறேன். தமிழக சகோதரிகளில் ஒருவராக, நாங்கள் சொன்னவுடன் உரிமைத் தொகை கொடுத்துவிட்டோம். ஆனால் நீங்கள் சொல்லி இரண்டரை ஆண்டுக்கு பின்னர் தான் கொடுக்க உள்ளீர்கள். எனவே இரண்டரை ஆண்டுக்கும் சேர்த்து செப்டம்பர் 15-ம் தேதி இத்தொகையை கொடுத்து விடுங்கள் என கூறினேன்.
சமையல் கியாஸ் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார். புதுச்சேரி அரசு ரூ.300 குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 குறைப்போம் என கூறினார்கள். ஆனால் இதுவரை சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாம் விலையை குறைப்போம் என சொல்லாமல், விலையை குறைத்துள்ளோம்.
எனவே மற்ற மாநிலங்களை விட புதுச்சேரி எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது. முதல்வர் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டம் கொண்டுவந்தாலும் நான் அனுமதி தருவேன். கடந்த ஆட்சியில் பல பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது.
ஆளுநராக இல்லாமல், புதுச்சேரியின் சகோதரியாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்த அனுமதி வழங்குகிறேன். புதுச்சேரி மருத்துவத்துறையின் மீது அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பவ திட்டம் புதுச்சேரியில் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரியில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். சரியான நேரத்துக்கு பணி முடித்து செல்ல வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் கவனம் முழுவதும் அதன் மீது தான் இருக்க வேண்டும். மாறாக தனியார் மருத்துவமனையோ, கிளினிக் வைத்துக்கொண்டு அரசு மருத்துவமனை மீது பாதி கவனம் செலுத்தும் அரசு மருத்துவர்கள் பணிக்கு தேவையில்லை என மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் சிறப்பான வளர்ச்சி பெற வேண்டும் என்பதே என் குறிக்கோள்” என்றார்.