கொச்சி : ‘தன் மொபைல்போனில் ஒருவர் ஆபாச படம் பார்ப்பதை குற்றமாகக் கருத முடியாது. இது அவரது தனிப்பட்ட விருப்பம். தற்போதைய இணையதள உலகில், ஆபாச படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
‘அதனால், குழந்தைகளுக்கு, மொபைல் போன் கொடுப்பதற்கு பதிலாக, வெளியே சென்று விளையாடச் சொல்லுங்கள்’ என, ஆபாச பட வழக்கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட விருப்பம்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆலுவாவைச் சேர்ந்த, 33 வயது இளைஞர், 2016ல் சாலையில் இருந்தபோது, தன் மொபைல்போனில் ஆபாச ‘வீடியோ’ பார்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.உன்னிகிருஷ்ணன், தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
தன் மொபைல் போன் வாயிலாக மற்றவர்களுக்கு ஆபாச படங்களை பகிர்வது, பொது இடத்தில் மற்றவர்களுக்கு காட்டுவதே குற்றமாகும்.
தன் மொபைல்போனில் ஒருவர் ஆபாச படம் பார்ப்பதை குற்றமாகக் கருத முடியாது. இது அவரது தனிப்பட்ட விருப்பம். அவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட முடியாது. அவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
தற்போதைய இணைய உலகத்தில், ஆபாச படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகள் கூட அவற்றை பார்க்க முடியும்.
வீட்டு வேலைகளை செய்வதற்காக, குழந்தைகளிடம் மொபைல்போனைக் கொடுத்து சமாதானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்கு வெளியே சென்று விளையாட அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும், இணையதளங்கள் வாயிலாக உணவுகளை வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும்.
கைப்பக்குவம்
அம்மாவின் கையால் தயாரிக்கப்படும் உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள். தாயின் கைப்பக்குவத்தின் ருசிக்கு ஆசைப்பட்டு, குழந்தைகள் வீட்டுக்கு வந்து சாப்பிடுவதை விரும்ப செய்ய வேண்டும்.
மொபைல்போன்களில் நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கும்படி அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நல்ல குடிமகன்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்