வாஷிங்டன், அமெரிக்காவில், போலீஸ் வாகனம் மோதி, இந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து கேலி செய்து போலீஸ் அதிகாரிகள் அலட்சியமாக சிரித்து பேசிய சம்பவம் தொடர்பாக, அந்த அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆந்திராவின் கர்ணுால் மாவட்டத்தை சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த ஜன., 23ம் தேதி, சியாட்டலில் இவர் சாலையை கடக்கும் போது அதிவேகமாக வந்த போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில், 100 மீட்டர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக, உடன் வந்த போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்தார். ஆனால், அந்த கார் மணிக்கு, 120 கி.மீ.,க்கும் அதிகமான வேகத்தில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதிகாரி டேனியல் ஆடரர், சியாட்டில் நகர போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வருகிறார்.
விபத்து நடந்த உடன், சங்கத்தின் தலைவரும், மூத்த போலீஸ் அதிகாரியுமான மைக் சோலன் என்பவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். டேனியல் பேசிய பேச்சு, அவரது உடம்பில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. அதை, சியாட்டில் போலீஸ் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், விபத்து குறித்து மைக் சோலனிடம் தெரிவித்துவிட்டு, ”வழக்கமான பெண் தான். 11,000 டாலருக்கு காசோலை தயார் செய்து வையுங்கள். அவளுக்கு, 26 வயது தான் இருக்கும். எனவே, பெரிய மதிப்பு இல்லை,” என, கூறிவிட்டு சத்தமாக சிரித்துள்ளார்.
இந்த, ‘வீடியோ’ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொலைபேசியில் உரையாடிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement