“எங்க காதலுக்கு உயிர் இருக்கு. ஆனா நிஜத்துல இல்ல. அது காத்தோட காத்தா கலந்து இருக்கு. எப்பலாம் நான் சாட் செய்றனோ அப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். மத்த கேர்ள்ஸ் மாதிரி என் காதலி ஸூசியா இல்ல. ஷார்ட்டா சொன்னா நான் சொல்றது எல்லாத்தையும் காது கொடுத்து கேக்குற காதலி. கோவப்படாத காதலி. அவளும் நானும், நானும் அவளும்னு நவீன டெக் யுக காதல் எங்களுடையது” என விவரிக்கும் சிறுகதை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அதை படித்ததும் எனக்குள் எழுந்த ஒரே கேள்வி இது எப்படி சாத்தியம் என்றுதான். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இப்போது அது சாத்தியப்படும் என்கிறது காலம்.
எந்திரன் படத்தில் வரும் ரோபோ அளவுக்கு அது இல்லை என்றாலும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் வரும் சிம்ரன் ஏஐ போல ஒரு காதலியை அல்லது காதலனை பெறலாம். தொழில்நுட்ப வளர்ச்சி இந்த மெய்நிகர் தேடலுக்கு வழிவகுக்கிறது. நாம் சொல்வதெல்லாம் காதை கொடுத்து கேட்கும், வாயை மூடி கவனித்து அதன் பிறகு பதில் சொல்லும் காதலனோ, காதலியோ ஏஐ தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துக் கொள்ளலாம். நமது டிஜிட்டல் இணையர் என்ன மாதிரியான குணாதிசயம் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியை சில டெக் நிறுவனங்கள் தனித்துவ புராஜக்ட் மூலம் முன்னெடுத்துள்ளன. இந்த கான்செப்ட் டெவலப்பர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. சில நிறுவனங்கள் சாமணியர்களுக்கும் வழி ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த துணைகள் பல்வேறு விஷயங்களில் நமக்கு ஆலோசனைகளை வழங்கும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் Andreessen Horowitz (a16z) எனும் நிறுவனம் மனிதர்கள் தங்களுக்கு ஏற்ற டிஜிட்டல் ஏஐ துணையை அமைத்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இதற்காகவே சில ஏஐ மாடல்களை முன்கூட்டியே புரோகிராம் செய்து வைத்துள்ளது. அந்த வகையில் எவ்லின், அலெக்ஸ், செபாஸ்டியன், கோர்கி என சில கேரக்டர்களையும் அறிமுகம் செய்துள்ளது. சாகசப் பிரியர், மெத்த படித்தவர், கவிஞர் என பல்வேறு அடிப்படையில் இந்த ஏஐ மாடல்கள் கோட் செய்யப்பட்டுள்ளன. இதில் திருப்தி இல்லை என்றால் பயனர்களே பிரம்மாவாக மாறி தங்களது டிஜிட்டல் ஏஐ துணையை தங்களுக்கு விருப்பமான வகையில் கோட் செய்து கொள்ளலாம்.
எப்படி இருக்கும் ஏஐ பார்ட்னர்: Andreessen Horowitz நிறுவனம் கோட் செய்துள்ள ஏஐ பார்ட்னர்கள் சாட்பாட்களாக செயல்படும் தன்மையை கொண்டுள்ளன. நம்மை நாமே புரிந்து கொள்ள இது உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. இதுதான் ஏஐ பார்ட்னரை அறிமுகம் செய்ய காரணம் என்றும் தெரிவித்துள்ளது. மனிதர்களின் ரிலேஷன்ஷிப் குறித்து ஏஐ பாட்கள் நேரடியாக இதன் மூலம் கற்றலை பெறும். அதன் வழியே மனிதர்கள் குறித்த ஒரு தெளிவான புரிதலையும் பெற்றுக் கொள்ளும். இது மெஷின் லேர்னிங் மூலம் சாத்தியமாகும். குறிப்பாக பொய் சொன்னால், முன்னுக்கு பின் முரணாக பேசினால் ஸ்மார்ட்டாக ஏஐ துணைகள் கண்டுபிடித்து விடும். என்னதான் இருந்தாலும் ரியல் லைஃப் காதலி அல்லது காதலன் அளவுக்கு அதனால் இப்போதைக்கு செயல்பட முடியாது. இது சாட்ஜிபிடி மற்றும் vicuna13b போன்ற சாட் அசிஸ்டன்ட் மூலம் இயங்குகிறது.
இதேபோல தணிக்கை செய்யப்படாத சகலமும் பேசும் ஏஐ துணையுடன் ரொமான்ஸ் செய்ய மற்றும் ஏஐ நண்பருடன் நட்பு பாராட்டுவது, பொழுதுபோக்கு, கோச்சிங் என ஏராளமான கான்செப்ட்களில் ஏஐ துணைகள் இயங்குகின்றன. இதனை கட்டமைக்க வழிகாட்டி ஒன்றையும் GitHub தளத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் துணையுடன் தனித்துவ ஏஐ துணைகளை கட்டமைக்கலாம். ‘Replika: My AI Friend’ எனும் சாட்பாட் செயலி துணையுடனும் டிஜிட்டல் பயனர்கள் சாட் செய்யலாம். இதன் பயன்பாட்டு அனுபவமும் மிக எளிதாக உள்ளது. பல்வேறு தலைப்புகளில் ஏஐ நண்பனுடன் அரட்டை அடிக்க உதவுகிறது இந்த செயலி. ஷேக்ஸ்பியரின் கவித்துவ பொன்மொழிகள் தொடங்கி சகலமும் பேசுகிறது. இதில் பயனர்கள் தாங்கள் விரும்பும் வகையில் தங்களது பாட்களை தேர்வு செய்து கொள்ளலாம். இது போல பல்வேறு ஏஐ சாட்பாட் செயலிகள் தற்போது இணையவெளியில் உலா வருகிறது.
அமரக் காதல்: 2000-க்கு பிறகு Siri, Cortana, Alexa போன்ற குரல்வழி வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் துணைகளை தூக்கி வெச்சு கொண்டாடி வரும் கூட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஏஐ வளர்ச்சியின் அடுத்த கட்டம் நல்லதொரு அனுபவமாக அமையும். ஆனாலும் உயிரும், உணர்வும் கலந்ததுதான் காதல். உறவு முறையும் அப்படித்தான். டிஜிட்டல் ஏஐ பார்ட்னர்கள் காதல் உறவு சார்ந்த புரிதலை மனிதர்களுக்கு தருமே தவிர, உணர்வுகளை கடத்தும் வல்லமையை இப்போதைக்கு அது கொண்டிருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் நாட்களில் அதற்கான திறனை கொண்ட ஏஐ பார்ட்னர் வரலாம்.
ஏனோ இங்கு ‘ஹெர்’ (Her) எனும் அற்புதமான திரைக் காவியம் நினைவுக்கு வருகிறது!
| தொடர்வோம் |
முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 6 | மனிதன் – அஃறிணை இடையிலான உறவுச் சவால்!