வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் (Libya), கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவந்த நிலையில், டேனியல் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகளால் மொத்த நாடுமே சோகத்தில் மூழ்கியிருந்தது. மத்திய தரைக்கடலின் (Mediterranean Sea) ஒரு பகுதியான அயோனியன் கடல் (Ionian Sea) பகுதியில் உருவான இந்த டேனியல் புயல் கடந்த 10-ம் தேதி 165 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்ததையடுத்து பெய்த மழையால், கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் கட்டப்பட்டிருந்த இரண்டு அணைகள் உடைந்து வெள்ளக்பெருக்குக்கு வழிவகுத்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230913_120221249.jpg)
இந்த வெள்ளமானது, டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் போன்ற நகரங்களை தண்ணீரில் மூழ்கடித்ததோடு, 5,000-க்கு மேற்பட்ட மக்களையும் பலிகொண்டது. இது குறித்து, லிபியாவின் கிழக்கு அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம், `குறைந்தது 5,300 பேர் இறந்திருக்கலாம்’ என்று இன்று தெரிவித்தது. மேலும், லிபியாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டேமர் ரமலான் (Tamer Ramadan) ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது என்று விவரித்தார்.
இதுமட்டுமல்லாமல், 10,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதில் டெர்னா நகரில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும், இதுவொரு பேரழிவு என்றும் லிபியாவின் கிழக்கு நிர்வாகத்தின் சுகாதார அமைச்சர் ஓத்மான் அப்துல்ஜலில் (Othman Abduljalil) நேற்று தெரிவித்திருந்தார். புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் மனித உயிர்கள் மட்டுமின்றி, மக்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் நகரத்தின் சாலைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230913_120312900.jpg)
டெர்னாவில் உள்ள மருத்துவமனைகள் இனி இயங்காது என்று தெரிவித்த அவசர மற்றும் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் ஒசாமா அலி (Osama Aly), மருத்துவமனைகளின் பிணவறைகள் நிரம்பிவிட்டதாகவும், பிணவறைகளுக்கு வெளியிலுள்ள நடைபாதைகளில் சடலங்கள் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், வெள்ளத்தால் தொலைபேசி இணைப்புகள் செயலிழந்துவிட்டதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்றும் ஒசாமா அலி தெரிவித்தார். இருப்பினும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் வேளையில், துருக்கி, இத்தாலி, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து போன்ற நாடுகள் மனிதாபிமான உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கின்றன.