ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த கார்த்திக்கு பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பதில்

கடந்த ஞாயிறன்று ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இன்னிசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. . ஆனால் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த நிறுவனம் செய்த குளறுபடிகளால், பணம் செலுத்தி ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கேட்டிலேயே நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதுமட்டுமல்ல உள்ளே நுழைந்தவர்களும் கூட கூட்ட நெரிசலிலும் சிக்கினர். முறையான பார்க்கிங் வசதி செய்யப்படாததால் தங்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தவும் முடியாமல் வெளியே இருந்து வரும் வாகனங்கள் உள்ளே செல்லவும் முடியாமல் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என்றாலும் முழு பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார் ஏ.ஆர் ரஹ்மான். ஆனால் பலரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கண்டித்தார்களே தவிர பெரும்பாலும் திரையுலக பிரபலங்கள் அனைவருமே ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாகவே தங்களது குரலை ஒலித்தனர். நடிகர் கார்த்தியும் இது குறித்து கூறும்போது, “ஏ.ஆர் ரஹ்மான் மீது எந்த தவறும் இல்லை. 30 வருடங்களாக அவரை நாம் அறிவோம்” என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகர் பாலாஜி முருகதாஸ், கார்த்தியின் டிவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள கார்த்தி சார்.. ஏ.ஆர் ரஹ்மானை யாரும் வெறுக்கவில்லை. அதிக டிக்கெட்டுகளை விற்று அவருடைய ரசிகர்களை ஏமாற்றி இதுபோன்ற குளறுபடிகளுக்கு காரணமான அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குறைந்தபட்சம் ஒரு வழக்காவது தொடர வேண்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

பலரும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் பாலாஜி முருகதாஸ் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் சார்பாக இதுபோன்று கூறியுள்ளது நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.