2009ம் ஆண்டிற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் மூன்று றூட் ஒன்பது பேஜ் காணி இன்று(14) வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ள பொது காணிகள், மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறித்த காணி பாடசாலை பயன்பாட்டுக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி டிப்போ சத்தியில் அமைந்துள்ள யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் அமைந்துள்ள காணியே இன்று இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி கையளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சுஜீவ கெட்டியாராச்சி காணி விடுவிப்பு ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்தார்.
தொடர்ந்து குறித்த ஆவணம் அரசாங்க அதிபரினால் கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அவர்களிடம் மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், மதகுருமார்கள், 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கிளிநொச்சி மத்திய கல்லூரி முதல்வர் ச.பூலோகராஜா, கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், இராணுவ உயரதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.