சட்டவிரோத கைது நடவடிக்கையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியில் வருவார் : ரஜினி நம்பிக்கை
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு ரஜினியின் நெருக்கமான நண்பர். சமீபத்தில் நடந்த என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ஐதராபாத்தை துபாய் போன்று மாற்றி விட்டார் சந்திரபாபு நாயுடு என்று புகழ்ந்தார்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ரஜினி, அவரது மகன் நாரா லோகேஷிடம் டெலிபோனில் உரையாடியதாக ஒரு தகவல் ஆந்திர மீடியாக்களில் வெளியாகி உள்ளது. அதில் நாரா லோகேஷிடம் ரஜினி பேசும்போது “தைரியமாக இருங்கள். என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்க மாட்டார். அவர் செய்த நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி திட்டங்களும் சட்டவிரோத கைதிலிருந்து அவரை பாதுகாக்கும். 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபட்ட அவரின் உழைப்பும், அர்பணிப்பும் ஒருபோதும் வீண்போகாது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையோ, அவர் மீதான குற்றச்சாட்டோ எந்த வகையிலும் சந்திரபாபு நாயுடுவின் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் தன்னலமற்ற பொதுச் சேவையால் அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்” என ரஜினி பேசியுள்ளார்.
இதனை சந்திரபாபு நாயுடு குடும்பத்தினேரோ, ரஜினி தரப்பினரோ உறுதிப்படுத்தவில்லை.