இஸ்லாமாபாத்: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள், இந்தியாவை புகழ்ந்து வருகின்றனர்.
இந்தாண்டு ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தது. இந்த அமைப்பின் கூட்டத்தை பல்வேறு நகரங்களில் நடத்திய மத்திய அரசு, உலக தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டை டில்லியில் கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியது. அமெரிக்கா, பிரேசில் அதிபர்கள், பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாட்டு பிரதமர்கள் என பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும் இடம்பெற்றிருந்தது. ஒரு நாட்டின் பிராந்தியத்தை வலுக்கட்டாயமாக வேறு எந்த நாடும் பறிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் ஐரோப்பா இடையில் பொருளாதார வழித்தடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆப்ரிக்க யூனியன் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பில் இணைந்தது என பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த மாநாடு, உலக நாட்டு மக்களை கவர்ந்துள்ளது. அதில் பாகிஸ்தான் மக்களும் விதிவிலக்கு அல்ல. மாநாட்டின் வெற்றியை பார்த்து அவர்கள் இந்தியாவை புகழ துவங்கி விட்டனர்.
இது தொடர்பாக கராச்சியை சேர்ந்த உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், உலகின் 20 முக்கிய நாட்டு தலைவர்கள், ஒரு நாட்டிற்கு சென்றால், அந்த நாடு பலனடையும். ஜி20 அமைப்பின் மாநாடு மூலம் இந்திய பொருளாதாரம் பெரிதும் பலனடையும் என்றார்.
மற்றொருவர் கூறுகையில், பெரிய பொருளாதார நாட்டு தலைவர்களையும் அழைத்து இந்தியா மாநாடு நடத்தியது. ஆனால், நமது வெளியுறவுக் கொள்கை எதிர்மறையாக உள்ளது. கடந்த 5 – 6 ஆண்டுகளில் நமது பொருளாதாரமும், பாதுகாப்பு சூழ்நிலையும் மோசம் அடைந்தது. உலகம் பாகிஸ்தானை முற்றிலும் புறக்கணித்துவிட்டது என்றார்.
மற்றொரு நபர் கூறுகையில், மோசமாக உள்ள பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்க நாம் முயற்சித்து வருகிறோம். ஆனால், உலகின் 20 முக்கிய பொருளாதார நாடுகளை அழைத்து இந்தியா மாநாடு நடத்துகிறது. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தது இந்தியர்களை பெருமையடைய செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த படங்களை பார்த்தோம். அதில், உலக தலைவர்களுடன் அந்நாட்டு பிரதமர் மோடி உள்ளார்.
உலகம் முன்பு இந்தியாவை நேர்மறையாக காண்பித்துள்ளனர். சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மான் பாகிஸ்தான் வரவில்லை. ஆனால், ஜி20 மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்றார். இது, உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்தை காட்டுகிறது. அதேபோல், பாகிஸ்தானை அழைக்காமல், வங்கதேச பிரதமரையும் ஜி20 மாநாட்டிற்கு அழைத்தது ஆச்சர்யம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு, பாகிஸ்தானை சேர்ந்த பலரும் இந்தியாவை புகழ்ந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்