போக்குவரத்து சபையில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாணவர்களை உள்ளீர்ப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்
இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படும் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாணவர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாளக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் கூடிய வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில், கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதற்கமைய சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி 50 தொழில்நுட்ப மாணவர்களைக் கொண்ட குழுவுக்கு விசேட பயிற்சி வழங்குவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றுபவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது என்ற பிரதான நோக்கத்தின் கீழ் இலங்கை – ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோதும், இந்தத் தேவை தற்பொழுது சரியான முறையில் பூர்த்திசெய்யப்படுவதில்லை என்பது குறித்து இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை போக்குவரத்து சபையில் தொழில்நுட்பவியலாளர்களுக்குக் காணப்படும் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்துக்கு வருடாந்தம் உள்ளீர்க்கப்படும் மாணவர்களில் 50 பேரை போக்குவரத்து சபைக்கெனப் பயிற்சியளித்துத் தருமாறு இலங்கை போக்குவரத்து சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை-ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்குக் காணப்படும் அங்கீகாரம் காரணமாக வெளியேறும் மாணவர்களுக்கு அதிக கேள்வி இருப்பதால் வேறு தொழில்களை நோக்கி மாணவர்கள் செல்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பயிற்றுவிப்பாளர்களுக்கான பற்றாக்குறை போன்ற வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இருந்தபோதும், இலங்கை போக்குவரத்து சபையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் முடிவெடுக்குமாறு குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை- ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியன இணைந்து கண்டியில் பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.