புதுடெல்லி: நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி மிக முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு அவர் அளித்துள்ள பேட்டியில், “‘இந்தி திவஸ்’ நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது.
சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு புனே நகரில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “தேசிய ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் இழையை இந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.