ஸ்ரீநகர்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட காஷ்மீர் டிஎஸ்பி ஹிமாயூன் முசாமின் வீட்டக்குச் சென்று அவர் ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய ஃபரூக் அப்துல்லா, “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த அழிவினைப் பார்த்து வருகிறோம். இதன் முடிவினை நான் இன்னும் பார்க்கவில்லை. நாங்கள் ரஜோரி போன்ற இடங்களில் நடக்கும் என்கவுன்டர் பற்றியும் கேள்விப்படுகிறோம். அதேநேரத்தில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுகின்றது. தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா? ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பும் வரை தீவிரவாதம் முடிவுக்கு வராது. சண்டை அமைதியைத் தராது. பேச்சுவார்த்தையே அமைதியைத் தரும். உக்ரைனே அதற்கு உதாரணம். சண்டையால் அந்நாடு அழிக்கப்பட்டுள்ளது. அங்கேயும் பேச்சுவார்தையே அமைதியைக் கெண்டுவரும், வேறு வழியே இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அனந்தநாக் மாவட்டத்தின் கேகர்நாக் அருகே காடோல் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் மூவரும் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மன்பிரீத் சிங், ஆஷிஷ் தோன்சாக், ஜம்மு காஷ்மீர் டிஎஸ்பி ஹிமாயூன் முசாமில் பட் ஆகியோர் வீர மரணம் அடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகள் தரப்பில் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு அங்கு நடைபெற்ற மற்றொரு மிகப் பெரிய சம்பவமாக இது கருதப்படுகிறது.