மயிலாடுதுறை அருகே அரசு பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்கள் பலர் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் ஆப்சென்ட் ஆவதாகக் கூறப்படுகிறது. சில மாணவர்கள் அடிக்கடி விடுமுறையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து கிளம்பும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், நகர்ப் பகுதியிலுள்ள பூங்காவுக்குச் செல்கின்றனர். அங்கு வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பள்ளியில் பணிபுரியும் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல் நேற்று பல மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஆசிரியர்கள் இருசக்கர வாகனத்தில் மாணவர்களைத் தேடி பூங்காவுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் சிலர், வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து போதையில் இருந்திருக்கின்றனர்.
ஆசிரியர்களைப் பார்த்ததும் மாணவர்கள் சிலர் பூங்காவின் சுவரில் ஏறி குதித்து ஓடினர். இருந்த சில மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் பூங்காவுக்கு வந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். கஞ்சா கிடைக்காதபட்சத்தில், வேறு வகையில் போதையடைகின்றனர்.
இந்தப் பூங்காவில் இத்தகைய சம்பவங்கள் தினமும் தொடர்வதாகவும், மாணவர்கள் சீரழிவதாகவும் சிலர் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்த சூழலில் பள்ளிக்கு வராமல் போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் மாணவர்களைத் தேடி ஆசிரியர்கள் அழைந்து வரும் தகவல், அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதனிடம் பேசினோம். “எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுப்பது தொடர்ந்தது. வீட்டிலிருந்து கிளம்பி வரும் அவர்கள், பள்ளிக்கு வராமல், பூங்கா, சினிமா தியேட்டர், பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வது எங்களுக்குத் தெரியவந்தது.
பூங்காவுக்குச் செல்லும் மாணவர்கள், வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் என்ன போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவில்லை. பார்க்கப் போகும்போது, இரண்டு மாணவர்கள் நல்ல போதையில் இருந்தனர். என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு மாணவர்களைத் தேடி வந்த ஆசிரியரின் முகத்தில் போதையிலிருந்த மாணவன் ஒருவன் குத்திவிட்டான். இதனால் மாணவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஒருவித அச்சத்துடனேயே நாங்கள் வந்து மாணவர்களைத் தேடி அழைத்துச் செல்கிறோம்.
பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்துவிட்டதுடன் கடமை முடிந்தது என இல்லாமல், மாதத்துக்கு ஒரு முறை பள்ளிக்கு வந்து தங்கள் மகன் ஒழுங்காகப் பள்ளிக்கு வருகிறானா… படிக்கிறானா என்று தெரிந்துகொள்ள வேண்டும். போலீஸார், காலை 11 மணி, மாலை 3 மணி என இரண்டு முறை பூங்கா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பள்ளி சீருடையில் இருக்கும் மாணவர்களை விசாரித்து எச்சரித்தால், இதனைத் தடுக்கலாம். கண்ணுக்குத் தெரிந்து மாணவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்தி சீரழிகிறார்கள் என்று தெரிந்தும், அவர்களைக் கண்டித்து திருத்த முடியாமல் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY