நாக்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானி ஒருவர் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது விமானி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விமானி உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும், அவர் விமானம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மற்ற பயணிகளின் நிலையும் என்ன ஆகியிருக்கும்? தங்களின் விமானி மற்றும் பணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தற்போது இண்டிகோ நிறுனவம் புதிய வாட்ச்ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தேல்ஸ் குழுமத்துடன் இணைந்து விமானிகள் அணிவதற்கான புதிய கேட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ளது.
இது, அவர்களது விமானிகளின் சோர்வு அளவை பகுப்பாய்வு செய்யும் கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச், விமானிகளின் உடல்நலன் மற்றும் விமானத்தின் வழிகள், குழு விவரங்கள் மற்றும் தாங்கள் செல்லும் நாடுகள் பற்றிய விவரங்கள் உள்பட பல விரிவான நுண்ணறிவு வசதிகளைக் கொண்டுள்ளது.
‘எங்கள் விமானிகளின் நல்வாழ்வுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்க விரும்புகிறோம். அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலனை உறுதிசெய்து இறுதியில் பயணிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்த நினைக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த வாட்ச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இண்டிகோ விமானிகள் அனைவரும் தவறாமல் இந்த வாட்ச்சை அணிய வேண்டும்’ என இண்டிகோ நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச் விமானிகளின் சோர்வு அளவுகளைத் தாண்டி நிகழ் நேரத் தரவு, வரலாற்றுத் தகவல்கள் மற்றும் முன் கணிப்பு பகுப்பாய்வு என விமானிகளுக்குத் தேவையான அனைத்து விதத்திலும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.