iPhone 15: இந்தியாவில் உற்பத்தி; ஆனாலும், விலை அதிகம்… ஏமாற்றத்தில் இந்திய வாடிக்கையாளர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்களின் பெரும்பாலான ஐபோன் உற்பத்தியை செய்து உலகம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா – சீனா இடையே நடந்து வணிகப் பனிப்போரால் ஆப்பிள் நிறுவனம் தங்களின் உற்பத்தி நிலையங்களை சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது.

ஐபோன் உற்பத்தி

அந்த வகையில் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களை விநியோகிக்கும் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் ஐபோன் பாகங்களை இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து வருகிறது. 2019 முதல் சில ஐபோன் மாடல்களை இங்கேயே உற்பத்தி செய்யவும் ஆரம்பித்தது. டாடாவின் ‘டாடா எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனமும் இதில் கைகோர்த்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதல் ஐபோனாக ‘ஐபோன்14’-யை உற்பத்தி செய்தது. தற்போது, புதிய ‘ஐபோன் 15’-யையும் உற்பத்தி செய்து வருகிறது. ஐபோன் 12 மற்றும் SE, SE1 மாடல்களை பெங்களூரில் உற்பத்தி செய்த விஸ்ட்ரான் நிறுவனமும் புதிய ‘ஐபோன் 15’யை உற்பத்தி செய்கிறது. இதுதவிர, இந்தியாவில் பல இடங்களில் உற்பத்தியைத் தொடங்கியிருக்கிறது ஆப்பிள். ஆப்பிளின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 5-7 சதவிகிதம் இந்தியாவில்தான் நடக்கிறது. இதை 2025-க்குள் 25 சதவிகதமாக அதிகப்படுத்துவதே ஆப்பிளின் திட்டமாம்.

சென்னை ஸ்ரீபெரும்புதூர்

அப்படியிருந்தும் ஐபோன் விலை இங்கு இந்தியாவில் குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு, ஆப்பிள் சாதனங்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கு விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அவை வெளிநாடுகளிலிருந்து உற்பத்தி செய்து இங்கு இறக்குமதி செய்யப்படுவதுதான். ஆனால், கடந்த வாரம் அறிமுகமான ‘ஐபோன் 15’ இந்தியாவின் பல இடங்களில் உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலை குறைந்திருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், இப்போதும் ஆப்பிள் அமெரிக்கா, துபாயைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமான விலையிலேயே தங்களின் ‘ஐபோன் 15’ மாடலை விற்பனை செய்கிறது. ஐபோன் 15 (128 GB) அமெரிக்காவில் ₹ 66,317 ($799), துபாயில் ₹76,817 (AED 3,399). ஆனால் இந்தியாவில் ₹79,900. அதாவது, அமெரிக்காவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 20% அதிகம்.

ஐபோன் 15

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. அந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256GB) அமெரிக்காவில் ₹ 99,517 ($1,199), துபாயில் ₹1,15,237 (AED 5,099). ஆனால் இந்தியாவில் ₹1,59,900. அமெரிக்காவைக் காட்டிலும் கிட்டத்தட்ட 51% அதிகம். இப்படியாக, இந்தியாவிலேயே அசெம்பிள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் போதும் ஐபோன்களின் விலை மாற்றமில்லாமல் மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பது இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

iPhone 15 Price Difference

எப்போதும் புதிய ஐபோன்களுக்கான டிமாண்ட் என்பது இந்தியாவில் குறைவாக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆப்பிள் தரப்பும் முந்தைய தலைமுறை ஐபோன்களை அதிக அளவில் இந்தியாவில் விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறது.

கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்பும், இந்தியாவில் பாதிக்கு மேல் (54%) முந்தைய மாடல் ஐபோன்களே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.