அஸ்வின், முரளிதரன் அல்ல….இவர் தான் சிறந்த ஸ்பின்னர் – பாக். வீரரை புகழ்ந்த கவுதம் கம்பீர்

மும்பை,

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் யார் என்று கேட்டால் ரசிகர்கள் அளிக்கும் பதில் ஷேன் வார்னே, முரளிதரன் ஆகியோரது பெயர்களாகத்தான் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு அவர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரன் வலது கையில் பந்தை சுழற்றி உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து யாராலும் எளிதில் எட்ட முடியாத 800 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற சாதனை படைத்துள்ள அவர் வரலாற்றின் மிகச் சிறந்த ஆப் ஸ்பின்னராக போற்றப்படுகிறார். தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர் யார் என கேட்டால் பலரது பதில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினாகத்தான் இருக்கும்.

இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்று தந்த அஸ்வின் தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன், அஸ்வின் ஆகியோரை விட பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தான் உலகின் சிறந்த ஆப் ஸ்பின்னர் என்று கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

சக்லைன் முஷ்டாக்கை விட சிறந்தவர் யாரும் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். நான் முரளிதரனுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன். அதே போல ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோருக்கு எதிராகவும் நிறைய பேட்டிங் செய்துள்ளேன்.

ஆனால் உச்சத்தில் இருக்கும் போது முஷ்டாக் மிகவும் வித்தியாசமானவர். மேலும் அவர் தான் தூஸ்ரா பந்தை அறிமுகப்படுத்தியவர். அத்துடன் 90-களில் எத்தனை ஸ்பின்னர்கள் கடைசி 10 ஓவர்களில் பந்து வீசினார்கள்?.

மேலும் அனைவரும் நான் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வேன் என்று சொல்வார்கள்.

ஆனால் ஒருமுறை இங்கிலாந்தில் நான் சக்லைன் முஷ்டாக்கை எதிர்கொண்டேன். அங்கே பிட்டாக இல்லாமல் இருந்த போதிலும் அவருடைய கைகளில் இருந்து பந்து மிகவும் துல்லியமாக வந்தது. எனவே உச்சத்தில் அவரை விட ஒரு சிறந்த ஆப் ஸ்பின்னர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.