தென் மாநிலங்கள் தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்து வருகிறது. 1937-ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். ஆனால், தற்போது மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, இந்தியை தேசிய மொழியாகவே வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14-ம் தேதி `இந்தி திவாஸ் விழா’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்தி, நாட்டின் பல்வேறு மொழிகளை ஒன்றிணைக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மொழிகளின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் மொழியின் பெயர் இந்தி. பிராந்திய மொழிகளுக்கு இந்தி மொழியே அதிகாரமளிக்கிறது. சுதந்திர இயக்கம் முதல் இன்று வரை, நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகித்து வருகிறது” என்றார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித் ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சிதிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் இந்தி மொழியைப் பேசுகிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு இந்தி மொழி மட்டுமே தெரியும். அதற்காக இந்தி மொழி தெரியாத எங்களை இந்தி பேசச் சொல்கிறீர்களா… இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலளித்திருக்கும் நடிகை கங்கனா ரணாவத், “அமித் ஷா குஜராத்தைச் சேர்ந்தவர், அவரது தாய் மொழி குஜராத்தி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.