இந்திய மாணவி இறந்ததில் கடும் சர்ச்சை : நடவடிக்கைக்கு அமெரிக்க அரசு உறுதி| The US government has decided to take appropriate action in the Indian students death

வாஷிங்டன், ‘அமெரிக்காவில், போலீஸ் ரோந்து வாகனம் இடித்து இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, விபத்துக்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அமெரிக்க அரசு உறுதி அளித்து உள்ளது.

அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

கடந்த ஜன., மாதம், சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடக்கும்போது, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம், அவர் மீது மோதியது.

இதில், 100 மீட்டர் தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாகனத்தை, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன், டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.

விபத்துக்கு பின், சியாட்டில் போலீஸ் சங்க தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல், இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார்.

அப்போது, மாணவி குறித்தும், அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார். இந்த உரையாடல், போலீஸ் அதிகாரி டேனியலின் உடம்பில் இருந்த கேமராவில் பதிவானது. அந்த, ‘ஆடியோ’ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விபத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், விபத்து ஏற்படுத்தியது மட்டுமின்றி கேலி பேசிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், இந்திய வம்சாவளி எம்.பி.,க்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் கோரிக்கை விடுக்க துவங்கியுள்ளனர்.

இது தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, விபத்துக்கு காரணமாக போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிபர் ஜோ பைடன் அரசு உறுதி அளித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.