- பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றாடல் அடிப்படையில் பல புதிய திட்டங்கள் – சாகல ரத்நாயக்க தெரிவிப்பு.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கான, வலுவான மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சி நிகழ்ச்சி நிரல்களுடன் இலங்கையை இந்து சமுத்திர வலலயத்திற்கு உயர்வான இடத்திற்கு கொண்டுச் செல்ல அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சாகல ரத்நாயக்க, ஒரு நாடு என்ற வகையில் நிலைத்தன்மை, நம்பகத்தன்மையையுடனான விம்பத்தை தக்கவைத்துக் கொள்வதன் ஊடாக உலகில் இலங்கையின் அபிமானத்தை பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
‘அண்மைய உயர் நிலை சுற்றுப்பயணங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தின் நோக்கு’ என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சிகளின் போது, டிஜிட்டல் நிதியியல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜதந்திரிகள் மற்றும் கல்வியியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆசிய வலயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இலங்கையின் அமைவிட ரீதியான முக்கியத்துவம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,
இந்து சமுத்திர வலயத்தின் ஒற்றுமைக்கான வலுவான வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதால் இந்து சமுத்திரத்தின் வர்த்தக பாதைகளிலிருந்து உலக தொடர்பாடல்கள் வரையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு நாடுகளினதும் தேசிய தேவைப்பாடுகள் சர்வதேச கட்டமைப்பக்குள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்சிக்கான, வலுவான மறுசீரமைப்பு மற்றும் மறுமலர்ச்சி நிகழ்ச்சி நிரல்களை எடுத்துரைத்த அவர், இந்து சமுத்திரப் வலயத்தில் இலங்கை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதால், இந்து சமுத்திர வலயத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் இலங்கை முக்கிய பங்கை வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
வலயத்தின் கடல்சார் பாதுகாப்பு, கடல் அடிவாரத்தில் உள்ள இணைய கேபிள்களைப் பாதுகாத்தல், சட்டவிரோதமானது மீன்பிடித்தல் மற்றும் ஆள்கடத்தலுக்கு தீர்வு, கடல் மாசை மட்டுப்படுத்துதல், சுற்றாடல் பிரச்சினைகளை தீர்த்தல், இடர் நிவாரண சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் திறந்த இந்து-பசிபிக் வலயத்தை மேம்படுத்துவதற்கான இலங்கையின் மத்தியஸ்த கொள்கைகளில் ஒன்றாகும்.
மனிதாபிமான மற்றும் அனர்த்தங்களின் போதான நிவாரணங்கள் (HADR) வழங்குதல் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்களை கருத்தில் கொண்டு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் போது, நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை அடைந்துகொள்ள முடியும்.
சர்வதேச ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு, இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை என்பன முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நிலையானதும் நம்பகமானதுமான விம்பத்தை தோற்றுவிக்க உதவும்.
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தனித்துவமான மைல்கல் இலக்கு என மேற்படி முற்சிகளை குறிப்பிடலாம். கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில், இலங்கை சர்வதேச பங்குதார்களிடத்தில் உத்தரவாதத்தை கோரியிருந்தது. பெரிஸ் சமவாயத்துடன் இணைந்து இந்தியாவும் சீனாவும் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. பிரதான பங்குதாரர்களின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது.
இந்தக் கலந்துரையாடலில் வான், கடல், நிலம், பொருட்கள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மின் இணைப்புகளின் மேம்பாடு உட்பட பல்வேறு வழிகளில் தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. இலங்கை தனது மறுசீரமைப்பு முயற்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் முதலீடுகளை கவர்வதற்கும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட எதிர்பார்க்கிறது.
காலநிலை மாற்றங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் பிரான்ஸின் பங்களிப்பு மற்றும் வலயத்தின் சமுத்திர பாதுகாப்பை கருத்திற் கொண்டு, திருகோணமலையை தளமாக கொண்ட பாதுகாப்புப் கல்லூரி ஒன்றை நிறுவுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதற்கு மேலதிகமாக பொருளாதார அபிவிருத்தியின் போது தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டம் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீன முதலீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்து சமுத்திரத்தில் பிரதான போட்டியாளராக இலங்கையின் நோக்கினை முன்னோக்கி கொண்டுச் செல்லும்போது, தனியார் துறையின் தன்மை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்குள் மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளுடனும் இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்புக்கள் மற்றும் எரிபொருள் குழாய் கட்டமைப்பாக மேம்படுத்தும் முயற்சிகளுக்காக இலங்கை அர்பணிப்புடன் செயற்படும். இந்த அணுகுமுறையால் இலங்கையினதும் அண்டை நாடுகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை எற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மேலும், உயர்தொழில்நுட்ப விவசாயம் மற்றும் பால்உற்பத்தி சார்ந்த கால்நடைத் துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விதமாக, உணவுப் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் தொடர்பிலான முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உணவு உற்பத்தியில் தன்னிறைவை உறுதி செய்தல் மற்றும் இறக்குமதியின் மீது சார்ந்திருப்பதைக் குறைப்பதே நோக்கமாக காணப்படுகிறது.
இந்த பொருளாதார அம்சங்களுக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்திய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பில் முன்மொழிவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தெரிவுக்கமைய, பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்படையை உருவாக்குவதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் கல்வி சார்ந்த கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க இலங்கை உறுதி கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய சீன விஜயம் இலங்கைக்கு மிகவும் சாத்தியமாக அமைந்திருந்தாகவும், விரைவில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன-இலங்கை உறவுகளைப் பொறுத்தவரை, சீனாவின் குறிப்பிடத்தக்க இரண்டு முதலீடுளில் ஒன்றான துறைமுக நகரத் திட்டத்திற்கு அவசியமான புதிய நீதி கட்டமைப்பை தயாரிப்பதற்கான ஆசோலனைகள் சவால்களுக்கு மத்தியிலும் கோரப்பட்டுள்ளது. இந்த சட்ட ரீதியான செயற்பாடுகள் எதிர்கால முதலீடுகளை கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் மேலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முதலீட்டு வலயத்தை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு போதிய அளவில் கல்பல்கள் வராத நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.
வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி தொழிற்சாலைகளை நிறுவுதல் மற்றும் இலங்கைக்கான வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இலக்கை அடைவதற்கான இயலுமையும் கிட்டும்.
ஜப்பானிய உயர் அதிகாரிகளின் அண்மைய விஜயத்தின் போதான பேச்சுவார்த்தையில் இலங்கையின் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு காலநிலை மாற்றம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும் இலங்கையின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக உகந்த வணிக சூழலை உருவாக்குவதற்காக, ஜப்பான் போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (Gopal Bagley), சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong), பிரான்ஸ் தூதுவர் ஜின் பிரன்கோசிஸ் பெக்டெட் (Jean-Francois Pactet) மற்றும் ஜப்பான் தூதுவர் ஹிதேயாகி மிசுகோஸி (Hideaki Mizukoshi) உள்ளிட்ட பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.