ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவானில் நேற்று (14.09.2023) இடம்பெற்றது.

இ.தொ.காவின் சர்வதேச விவகார பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மலையக தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்காக இ.தொ.கா முன்னெடுத்த போராட்டங்கள், மலையகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு தெளிவாகவும், விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

காப்புறுதி, காணி உரிமை உட்பட அமைச்சின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும், அதற்கு ஐ.நா. மற்றும் அதன் கீழ் இயங்கும் கிளை அலுவலகங்களின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது சம்பந்தமாகவும் ஐ.நா. வதிவிட பிரதிநிதியுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமான்; விரிவாக கலந்துரையாடினார்.

அத்துடன், அமைச்சரின் அழைப்பையேற்று நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. வதிவிட பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.