ஒரு டைம் டிராவல் போன், இரண்டு கேங்ஸ்டர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வாழ்வில் நிகழ்த்தும் மேஜிக்கே இந்த `மார்க் ஆண்டனி’.
பல ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ‘மோசமான’ டான் ஆண்டனியின் (விஷால்) மகன் மார்க்கிற்கு (விஷால்), தன் அப்பா என்றாலே வெறுப்பு. மார்க்கைப் பாசமாக வளர்த்து வருகிறார் ஆண்டனியின் உயிர் நண்பனும் இந்நாள் டானுமான ‘நல்லுள்ளம் கொண்ட’ ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா). தன் மீது பாசம் காட்டாத தன் அப்பாவான ஜாக்கி பாண்டியனை வெறுக்கிறார் அவரது மகனான ‘ரவுடி’ மதன் பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா). ஆண்டனியின் மகன் என்ற கெட்ட பெயரால் மார்க்கின் காதல் திருமணம் தடைப்படுகிறது.
இந்நிலையில், விரக்தியின் உச்சத்திலிருக்கும் மார்க்கிற்கு இறந்த காலத்திற்குப் பேசும் வசதியுள்ள ஒரு அதிசய போன் கிடைக்கிறது. அதை வைத்து இறந்த காலத்தில் வாழ்ந்த தன் அப்பா, அம்மா, சிறிய வயது மார்க் என ‘அதிசய போன்’ பேசுகிறார். உண்மையிலேயே ஆண்டனி கெட்டவரா, மார்க்கின் அம்மாவைக் கொன்றது யார், ஜாக்கி பாண்டியன் மார்க் மீது பாசம் கொட்ட என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கான பதிலோடு, அந்த அதிசய போன் நால்வரின் வாழ்க்கையில் என்னென்ன களேபரங்களை எல்லாம் நிகழ்த்துகிறது என்பதை ரகளையான சினிமாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்.
80ஸ் டான் ஆண்டனியாக முரட்டுத் தோற்றத்தில் மாஸ் காட்டுகிறார் விஷால். சண்டைக்காட்சிகளிலும், நக்கல் காட்சிகளிலும் மட்டுமே ஸ்கோர் செய்கிறார். ஆனால் அப்புராணி மகன் கதாபாத்திரத்தில் செயற்கையான நடிப்பை மட்டுமே வழங்கி நம்மைச் சோதிக்கிறார். உருக்கமான காட்சிகளில் இன்னுமே மெனக்கெட்டு பாஸ் மார்க் ஆவது வாங்கியிருக்கலாம். கதையின் நாயகன் விஷால்தான் என்றாலும், திரையின் நாயகனாக ஜொலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கொடூர வில்லன், காமெடி வில்லன் என ஒவ்வொரு காட்சியிலும் மாறி மாறி வந்து மிரட்டுகிறார். அப்பா எஸ்.ஜே.சூர்யாவுக்கு முதல் பாதி என்றால், மகன் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இரண்டாம் பாதி.
கதாநாயகி ரிது வர்மா வழக்கமான ஒரு ‘வழக்கமான கதாநாயகி’யாக வந்து போகிறார். தொடக்கத்தில் மிரட்டும் சுனில், சிறிது நேரத்திலேயே கூட்டத்தோடு கூட்டமாகப் போய்விடுகிறார். படம் முழுவதுமே வருகிறார் என்றாலும், எந்த அழுத்தமான காட்சிகளும் அவருக்கு வைக்கப்படவில்லை. அவரின் பாத்திரத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். செல்வராகவன், நிழல்கள் ரவி, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் ‘விஷால் vs எஸ்.ஜே.சூர்யா’விற்கு மத்தியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ரெடின் கிங்ஸ்லி படம் முழுவதுமே நம்மைச் சிரிக்க வைக்கப் போராடுகிறார். ஆனால், அதில் தோல்வியே!
இரு டான்களுக்கு இடையிலான நட்பு, மோதல், நம்பிக்கை துரோகம், மகன் பாசம் போன்றவற்றை ஒரு டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து, ரகளையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நிகழ்காலத்தைக் காட்டும் (1995) முதற்பாதியின் தொடக்கம் நிதானமாக நகர்வதோடு, படத்திற்கான ‘மூட்’-ஐ செட் செய்யவும், பின்னால் வரப்போகிற லாஜிக் இல்லாத திரைக்கதையையும் அந்த உலகத்தையும் நமக்குப் பழக்கவும் உதவியிருக்கிறது. ஆனாலும், பின்கதையில் வரவுள்ள ‘யார் நல்லவர்? யார் கெட்டவர்?’ என்ற ‘ரகசியம்’ ஒரு தமிழ் சினிமா ரசிகராக நமக்கு முன்னமே தெரிந்து விடுவதால் ட்விஸ்ட் என்று வருவதில் சுவாரஸ்யம் எதுவுமில்லை.
கேங்ஸ்டர், ஃபேன்டஸி, காமெடி என எல்லா ஜானரையும் கலந்துகட்டி ஓடுகிறது திரைக்கதை. அதனால் சுமாரான காட்சிகளைக்கூட காமெடியோ, ஆக்ஷனோ, எஸ்.ஜே.சூர்யாவின் மேஜிக்கோ கரை சேர்த்து விடுகிறது. பல காட்சிகளில் கைத்தட்டலையும் எஸ்.ஜே.சூர்யாவே அள்ளிவிடுகிறார். குறிப்பாக அப்பா – மகன், இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் போனில் பேசிக்கொள்ளும் காட்சிகள் சரவெடி டப்பாசு!
ஆனால், கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அத்தனை லாஜிக் ஓட்டைகளும், கேள்விகளும், குழப்பங்களும் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் தோராயமாக 254 பேரையாவது துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார்கள். `உங்க உலகத்துல சுட்டவர்களைக் கைது செய்யத்தான் போலீஸ் வராது, கீழ விழுந்து கிடக்கற தோட்டாவைப் பொறுக்கவாவது ஆள் வருவாங்களா?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.
அதேபோல ‘போன் வழி டைம் டிராவல்’ கான்செப்ட்டை நம்மை மகிழ்விக்க இஷ்டத்திற்குப் புரட்டி எடுத்திருக்கிறார் இயக்குநர். ஒருகட்டத்தில் இது டைம் டிராவல் செய்யும் சயின்ஸ் பிக்ஷன் படமா இல்லை ஃபேன்டஸியான மேஜிக் படமா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. அதிலும் போன் பேசியவருக்கு மட்டுமே காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் தெரியும் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டு, பின்னர் அந்த லாஜிக்கை இஷ்டத்துக்கு மாற்றிப் போட்டு கேம் ஆடியிருக்கிறார்கள். ஆனால், எங்கும் நமக்குப் போர் அடிக்கவில்லை என்பதால் பார்வையாளர்களை ஒரு கொண்டாட்ட மனநிலையிலேயே வைத்துத் தப்பித்து விடுகிறார்கள்.
அபிநந்தன் ராமனுஜத்தின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளுக்கு ‘மாஸ்’-ஐ கூட்டியிருக்கிறது. முக்கியமாக இறுதிக்காட்சியில் வரும் சண்டைக்காட்சிகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. பெரும்பாலும் இரவுநேர காட்சிகள்தான் என்றாலும், ‘ரெட்ரோ டோனை’ துறுத்தல் இல்லாமல் அழகாக செட் செய்திருக்கிறது. விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு விறுவிறுப்பையும் அதேநேரத்தில் காட்சியோட்டத்தில் தெளிவையும் கொடுத்திருக்கிறது. இரண்டரை மணிநேரக் களைப்பு தெரியாமல் அவர் கோத்திருக்கும் ஷாட்கள் பாராட்டுக்குரியவை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் எந்தப் பாடலும் ரசிக்கும்படி இல்லை. ஆனால் பின்னணி இசையில் விட்டதைப் பிடித்திருக்கிறார். ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘ரெட்ரோ’ பாடல்களும் உறுத்தல் இல்லாமல் காட்சிகளோடு பொருந்திப் போயிருக்கின்றன. சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோரின் உழைப்பு கவனிக்க வைக்கிறது. கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே, ஒப்பனையாளர் சக்தி என மொத்த தொழில்நுட்ப குழுவும் ஒரு ‘ரெட்ரோ வைப்’பை பார்வையாளர்களுக்குக் கடத்தும் முயற்சியில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.
டிரெய்லரில் ஹிட் அடித்த வசனங்கள், காட்சிகள் எல்லாம் படத்திலும் கச்சிதமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. முக்கியமாக சில்க் ஸ்மிதா காட்சி. ஆனா, அவங்க எப்படி சார் 1975ல நடிச்சாங்க?! டைம் டிராவல், ஃபேன்டஸினாலும் அந்த லாஜிக் இடிக்குதே பாஸ்?! இதைத் தாண்டி தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர்கள், பெண்கள் குறித்த மோசமான சித்தரிப்பையும் வசனங்களையும் இந்தப் படத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்குநரின் செயல் கண்டிக்கத்தக்கது. அவை இந்த டைம் டிராவல் கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருப்பதால் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே நிற்கின்றன.
இருந்தும், குறைகளைக் கடந்து, குழப்பமான டைம் டிராவல் கதையை எஸ்.ஜே.சூர்யா என்னும் டிரம்ப் கார்டு மூலம் ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றி எக்ஸ்ட்ரா மார்க் பெறுகிறான் இந்த `மார்க் ஆண்டனி’.