காத்மாண்டு: விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நம் நாட்டில் இருந்து, 20,000 மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த இரு வாரங்களில் பண்டிகைக்கான அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கூடுதல் சர்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் திட்டமிட்டது. இதையடுத்து, 60,000 மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய சுங்க வரி விலக்கு அளிக்குமம்படி, அந்நாட்டு நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டது. இருப்பினும், 20,000 மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு நிதி அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் தனிராம் சர்மா கூறுகையில், “நேபாளத்தில் உள்ள இரண்டு முன்னணி நிறுவனங்கள் வாயிலாக பண்டிகை காலங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தலா, 10,000 மெட்ரிக் டன் சர்க்கரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
நேபாளத்தில் சர்க்கரைக்கான தேவை, 3,00,000 மெட்ரிக் டன்னாக உள்ளது, அங்குள்ள, 12 சர்க்கரை ஆலைகள், 1 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை மட்டுமே உற்பத்தி செய்து வரும் சூழலில், நம் நாட்டில் இருந்து அதிகளவு சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement