விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் பலரும் இணையமெங்கும் எழுப்பிக் கொண்டிருக்கிற கேள்வி இதுதான்.
இதைத்தாண்டி, கடந்த சில நாட்களாக அஜித் துபாயில் செட்டில் ஆகப்போகிறார்; லண்டனில் வீடு பார்த்துக் குடியேறுகிறார் என்பது போன்ற செய்திகள் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. மகளின் படிப்பிற்காக துபாயில் செட்டில் ஆவதால், இப்போது லைகா தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ‘விடா முயற்சி’ படத்தின் படப்பிடிப்பையும் துபாயில் நடத்த திட்டமிட்டு வருகிறார் என்றும் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்பட சில படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ‘விடா முயற்சி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு இப்போது துவங்கும், அப்போது துவங்கும் என கடந்த சில மாதங்களாகவே பேச்சு இருந்து வந்தது.
இந்நிலையில் மகளின் படிப்பிற்காக அஜித் துபாயில் வீடு பார்க்கிறார், அங்கே தான் இனி வசிப்பார் என்றும், அதனால்தான் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை அங்கே நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்றும் பரவிய தகவல்கள் குறித்து விசாரித்தேன்.
சில மாதங்களுக்கு முன்னரே லண்டன் பயணத்தை முடித்த அஜித், கையோடு மகிழ்திருமேனியை அழைத்து ‘விடாமுயற்சி’யின் கதையை கேட்டார். கதை அவருக்கு திருப்தி. ஆக்ஷனும் எமோஷனலுமான கதை இது. படத்தில் த்ரிஷா, தமன்னா என சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது. நடிகர்கள் தேர்வை மகிழ்திருமேனியின் சாய்ஸிலேயே விட்டுவிட்டார் அஜித். சஞ்சய்தத், அர்ஜூன் தாஸ், த்ரிஷா என பலரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இந்தமுறை அக்டோபரில் படப்பிடிப்பு இருக்கும் என்றும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால், தயாரிப்பு தரப்பை பொறுத்தவரை அஜித்தே அறிவிக்கட்டும் அதுவரை பொறுமை காப்போம் என நினைக்கின்றனர். ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு சென்னை, ஹைதரபாத்திலும் இருக்கிறது.
இதற்கிடையே மகள் அனோஷ்காவின் படிப்பிற்காக அஜித் துபாயில் செட்டில் ஆகப்போகிறார் என்ற தகவல் குறித்தும் விசாரித்ததில், அனோஷ்கா இப்போது பதினொன்றாவது வகுப்பு படித்து வருகிறார். அவரது கல்லூரி படிப்பை உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்க அஜித் விரும்புகிறார். இதற்காக இங்கிலாந்து உள்பட சில நாடுகளிலும் உள்ள டாப் 10 கல்லூரிகள் குறித்து விசாரித்து வருகிறார். அப்படித்தான் துபாயிலும் விசாரித்து வருகிறார். அடுத்தாண்டு மகள் ப்ளஸ் 2 முடித்தவுடன், அவருக்கு சரியான படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என மிகப்பொறுப்புள்ள தந்தையாக அஜித் கல்லூரிகள் குறித்து விசாரித்து வருகிறார். எனவே, இன்னமும் சென்னையில் தான் இருக்கிறார். துபாயில் படப்பிடிப்பு தொடங்கினாலும் கூட, சென்னையில் இருந்துதான் செல்வார் என்கிறார்கள்.