மரப்பயிர்களுக்கு நடுவே வேறு பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு வருட பயிரான கரும்பிற்குள்ளும் ஊடுபயிர் பயிரிட முடியும் என்று நிரூபித்துள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி. நாட்டிலேயே கரும்பு விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையாக இருக்கிறது. புனே, கோலாப்பூர், நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
கோலாப்பூர் மாவட்டம் கர்நூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் சன்காவ்கர்(42). இவருக்கு மொத்தம் 9 ஏக்கர் நிலம் இருக்கிறது. மற்ற விவசாயிகளைப்போல் சதீஷும் பெரும்பாலும் கரும்பு பயிரிடுவது வழக்கம். ஆனால் கரும்பு விவசாயத்திற்கு ஆகும் செலவை ஊடுபயிர் மூலம் சரி செய்கிறார்.
இது குறித்து சதீஷ் கூறுகையில், ”என்னிடம் இருக்கும் நிலத்தில் 6 ஏக்கரில் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கரும்பு பயிரிடுவது வழக்கம். வழக்கமாக ஆகஸ்ட் மாதம் தான் கரும்பு விவசாயம் தொடங்கும். ஆனால் நான் நிலத்தை ஜூன் மாதமே தயார்படுத்த தொடங்கிவிடுவேன்.
கரும்புக்கு தயாரான நிலத்தில் ஜூலை மாதத்தில் நிலக்கடலை, மிளகாய் பயிரிடுவேன். இது தவிர மிகவும் குறுகிய காலத்தில் மகசூல் கொடுக்க கூடிய பச்சை கீரைகள், கொத்தமல்லி, செவ்வந்தியை மிளகாய் செடிகளுக்கு நடுவே பயிரிடுவேன்.
முதலில் கீரை, கொத்தமல்லி, செவ்வந்தி மூலம் வருவாய் கிடைக்கும். நிலக்கடலை மூன்றரை மாதத்தில் மகசூல் கொடுத்து முடித்துவிடும். அதன் பிறகு ஆறு மாதத்திற்குள் மிளகாயும் மகசூல் கொடுத்து முடித்துவிடும். அதன் பிறகு தான் ஆகஸ்ட்டில் பயிரிடக்கூடிய கரும்பு துளிரெடுத்து வளர ஆரம்பிக்கும். கரும்பு விவசாயத்திற்கு அதிக கூலியாட்கள் தேவை. ஒரு ஏக்கருக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. இந்த செலவில் 40 முதல் 50 சதவீதத்தை ஊடுபயிர் பயிரிட்டு அதன் மூலம் ஈடுகட்டுகிறேன்.
இதனால் கரும்பு மூலம் கிடைக்கும் வருமானம் அப்படியே எனக்கு கிடைத்துவிடுகிறது. அதோடு ஊடுபயிர் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கரும்பு விவசாயத்திற்கு தேவையான அளவு பணம் செலவு செய்யவும் முடிகிறது. கரும்பு வெட்டிய பிறகு அந்த இடத்தில் சோயாபீன்ஸ் பயிரிடுகிறேன்.
இதில் ஒரு ஏக்கருக்கு 9 முதல் 10 குவிண்டால் சோயாபீன்ஸ் கிடைக்கிறது. ஊடுபயிர்களுக்கு ஏற்படக்கூடிய பூச்சித்தாக்குதலை கரும்பு தடுத்து பாதுகாப்பு அரணாக நிற்கிறது. சோயாபீன்ஸ் நிலத்தில் நைட்ரஜன் சத்துக்கு உதவியாக இருக்கிறது. அதோடு ஊடுபயிர் பயிரிடுவதால் கரும்புக்கு களைக்கொல்லி பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. நிலத்திற்கு தேவையான உரம் எங்களது வீட்டில் உள்ள மாடுகள் மூலம் சாணமாக கிடைக்கிறது.
பயிர்களை கவனித்துக்கொள்ள என் வீட்டை தோட்டத்திலேயே கட்டி இருக்கிறேன். கரும்புக்கு 6 முதல் 7 டிராக்கர் மாட்டுச்சாண உரத்தை போடுகிறேன். அதோடு தொடர்ந்து 15 நாட்கள் ஆடுகளை நிலத்தில் இரவு நேரங்களில் தங்கவைக்கிறேன். ஊடுபயிர் பயிரிடுவதற்கு முன்பு ஒரு ஏக்கரில் 30 டன் அளவுக்கு மட்டுமே கரும்பு கிடைத்து வந்தது. ஆனால் ஊடுபயிர் செய்ய ஆரம்பித்த பிறகு இப்போது ஏக்கருக்கு 70 டன் வரை கரும்பு கிடைக்கிறது. எனக்கு குடும்ப சொத்தாக ஒன்றரை ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. ஆனால் விவசாயத்தின் மூலம் அதனை நானும் எனது சகோதரனும் சேர்ந்து 9 ஏக்கராக அதிகரித்து இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.