புதுச்சேரி: “ஒரு பைசா கூட வங்கிக் கணக்குக்கு வரவில்லை” என புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவித் திட்டம் குறித்து அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நம் நாட்டில் ஜி20 மாநாடு சிறப்பாக நடைபெற்றது. உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். முக்கியமான வல்லரசு நாடுகள் சீனா, ரஷ்ய நாட்டின் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது மிகப் பெரிய வருத்தத்தை கொடுக்கிறது. இதிலிருந்து இந்திய வெளியுறவுக் கொள்கையில், மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு தவறிவிட்டதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி இது தன்னுடைய வெற்றி என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார். பாஜகவும் அதை கொண்டாடுகிறது. ஜி-20 மாநாட்டின் வெற்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வெற்றி. தனி ஒருவர் அதன் பெருமையை எடுத்துக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி-20 மாநாட்டின் வெற்றி பிரதமர் மோடியினுடையது என்று பறைசாற்றுவது கண்டனத்துக்குரியது. மத்தியில் உள்ள மோடி ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிட்டால் கூட, அதற்கு பிரதமர், பாஜக தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வருவதில்லை. அதானி ஊழலைப்பற்றி இந்திய நாடே பேசுகிறது.
எந்ததெந்த துறைகளில் அதானி ஊழல் செய்திருக்கிறார் என்று பகிரங்கமாக நாடாளுமன்றம், மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தி பேசினார். அதற்கு விலை அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது தான். அதன்பிறகு நீதிமன்றம் அவரது எம்பி பதவியை திரும்ப அளித்தது. மோடியின் ஆட்சியில் சிஏஜி ரிபோர்டின்படி ஊழல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்கு எந்த பதிலும் நரேந்திர மோடி அரசு கூறவில்லை.
புதுச்சேரி சட்டப்பரவைத் தலைவர் செல்வம் தட்டாஞ்சாவடி பகுதியில் நில ஆர்ஜிதம் பற்றி விபரம் தெரியாமல் பேசுகிறார். ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் முதல்வராக இருந்தபோது, அந்த இடம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. ரூ.80 லட்சம் மாநில அரசு டெபாசிட் கட்டியது. அந்த நோட்டீஸ் அனுப்பியதோடு சரி. 4 ஆண்டு எந்த நடவடிக்கையும் ரங்கசாமி அரசு எடுக்கவில்லை. வருவாய்த் துறை நில ஆர்ஜிதத்தை ரத்து செய்தது. சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது என பொய்யான தகவலை கூறுகிறார். நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. சட்டப்பரவைத் தலைவர் செல்வம் தனது புகாரை நிரூபிக்க வேண்டும். அவர் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் முதலில் ரங்கசாமிதான் மாட்டுவார். இதற்கு ரங்கசாமி பதில்கூற வேண்டும். பொய்யான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 நிதியுதவி திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. ஒரே ஒரு மாதம் 10 ஆயிரம் பேருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது. அதன்பிறகு 73 ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. 75 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநர் சொல்லுகிறார். அது உண்மைக்கு புறம்பானது. இதுவரை ஒரு பைசாகூட அவர்களின் வங்கி கணக்கில் சேரவில்லை. பாஜகவினர் பொய் சொல்வதில் கலைத் தேர்ந்தவர்கள்.
பாஜகவின் தலைவராக தமிழகத்தில் இருந்தவர் தமிழிசை. அதன் சாரம் இவருக்கு இருக்கிறது. ஆளுநர் தமிழிசை சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும். தமிழிசை நாடாளுன்ற தேர்தலில் நிற்பதற்காக இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி மக்கள் மத்தியில் இடம் பிடிக்கலாம் என்று நினைக்கின்றார். அவர் தமிழகம், புதுச்சேரியில் எந்த தொகுதியில் நின்றாலும் போனியாகமாட்டார். இது எல்லோருக்கும் தெரியும். ஏற்கெனவே தூத்துக்குடியில் நின்று டெபாசிட் இழந்தவர். அவர் நாவடக்கத்தோடு செயல்பட வேண்டும். 75 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித் தொகை கொடுக்கவில்லை என்று நிரூபித்தால், தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து தமிழிசை பதவி விலகத் தயாரா?
புதுச்சேரியில் மாமூல் கேட்கும் கூட்டம் அதிகரித்து வருகிறது. ரங்கசாமி முதல்வர் பொறுப்பேற்றவுடன், மாமூல் வசூலிக்கும் கூட்டமும் வெளியே வந்துவிடும். கட்சி பாகுபாடின்றி காங்கிரஸ், திமுக., என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மாமூல் கேட்கும் கூட்டம் சட்டப்பரவையை சுற்றி வருகிறது. கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர். முதலமைச்சர், பேரவைத் தலைவர் அந்தக் கூட்டத்தை சட்டசபைக்குள் நுழைய விடக்கூடாது என கூறியுள்ளனர். இதைத்தான் நான் தொடர்ந்து புகார் கூறி வருகிறேன். அவர்களின் வேலையே மாமூல் வசூலிப்பதுதான். இவர்கள் மிரட்டி பணம் பறிக்கின்றனர். புதுச்சேரியில் மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் அதிகமாக உள்ளது. காவல்துறைக்கு மாமூல் மாதந்தோறும் சரியாக செல்கிறது” என்று அவர் தெரிவித்தார்.