ரூ.13,000 கோடியில் பிரதமர் மோடி அறிவித்த பிஎம் விஸ்வகர்மா திட்டம் நாளை தொடக்கம்

புதுடெல்லி: பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் விஸ்வகர்மாஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.

தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞர்கள்: இந்த திட்டத்தின் மூலம் குரு – சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.