அக்டோபர் மாதம் த்ரிஷாவின் மாதம். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் `தி ரோடு’, அந்த மாதம் 6ம் தேதி திரைக்கு வருகிறது. அதனையடுத்து அக்டோபர் 19ம் தேதி விஜய்யுடன் நடித்திருக்கும் `லியோ’வும் திரைக்கு வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின், படங்கள் தேர்வில் மிகக் கவனமாக இருக்கிறார் த்ரிஷா. இப்போது அவர் நடித்துள்ள ‘தி ரோடு’, மதுரையில் அதிக நாள்கள் படமாக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் ‘கில்லி’ படத்திற்குப் பின், இந்தப் படத்திற்காகத்தான் அவர் மதுரையை எட்டிப் பார்த்திருக்கிறார். சென்னையில் ஆரம்பிக்கும் கதை அப்படியே மதுரைக்குப் பயணமாகிறது. ‘சென்னைப் பெண் த்ரிஷா, மதுரைக்கு ஏன் செல்கிறார்? அங்கே அவருக்கு என்ன நேர்ந்தது’ என்பது ‘தி ரோடு’ படத்தின் கதை என்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும் ‘லியோ’ அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ படங்களுக்குப் பின், விஜய்யுடன் நடித்திருப்பதால், எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் த்ரிஷா.

மலையாளத்திலும் அவர் பிஸிதான். அங்கே நிவின்பாலியோடு நடித்த ‘ஹே ஜூடு’ படத்திற்குப் பின், இப்போது ‘மின்னல் முரளி’ ஹீரோ டொவினோ தாமஸின் ஜோடியாக ‘ஐடென்டிடி’ படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘ஃபாரன்ஸிக்’ படத்தை இயக்கிய அகில் பால், அனஸ் கான் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. படத்தில் த்ரிஷாவிற்கும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்கிறார்கள்.
‘ஐடென்டிடி’ படத்திற்கு முன்னரே மோகன்லால் ஜோடியாக ‘ராம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாகத் தகவல். ‘த்ரிஷ்யம்’ ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

இதற்கிடையே ‘ராங்கி’ படத்திற்கு முன்னர் கமிட்டான ‘பிருந்தா’ என்ற வெப்சிரீஸ் படப்பிடிப்பும் சமீபத்தில்தான் நிறைவடைந்திருக்கிறது. சூர்யா வங்கலா இயக்கியிருக்கிறார். இது தவிர அஜித்தின் ‘விடாமுயற்சி’யிலும் நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அடுத்து கமல், ரஜினி படங்களின் பட்டியலிலும் த்ரிஷா இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171வது படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் இரண்டிலும் த்ரிஷா இருக்கலாம் என்கிறார்கள்.