வாஷிங்டன்: போலீஸ் ரோந்து வாகனம் இடித்து, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று பேரணி நடத்தினர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம், அவர் மீது மோதியது. இதில், 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வாகனத்தை, கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். அவருடன், டேனியல் ஆடரெர் என்ற மற்றொரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.
விபத்துக்கு பின், சியாட்டில் போலீஸ் சங்கத் தலைவரை தொலைபேசியில் அழைத்த அதிகாரி டேனியல், இது குறித்து அவரிடம் தகவல் தெரிவித்தார்.
அப்போது மாணவி குறித்தும், அந்த விபத்து குறித்தும் கேலியாக பேசி அவர் சிரித்துள்ளார். விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறந்த மாணவிக்கு ஆதரவாக அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோரின் அமைப்பான, ‘உத்சவ்’ சார்பில் சியாட்டில் நகரில் நேற்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.
டென்னி பூங்கா துவங்கி, மாணவி பலியான இடம் வரை நடந்த பேரணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
வழி நெடுகிலும் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்ற அவர்கள், விபத்து ஏற்படுத்திய அதிகாரிகள் இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாணவி உயிரிழந்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இறுதியில், சியாட்டில் மேயர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு ஒன்றை தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பினர் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்