வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சியோல்: அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன் பயணத்தை முடித்து நேற்று நாடு திரும்பினார். கிம் ஜாங் உன்னின் இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக, கடந்த 12ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சென்றது, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
கடந்த 13ம் தேதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, கடலோர நகரமான விளாடிவோஸ்டாக்கிற்கு அருகே உள்ள விமான நிலையத்துக்கு சென்ற கிம் ஜாங் உன், ரஷ்யாவின் அணுசக்தி திறனுடைய குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ரஷ்யாவின் கடற்படை கப்பல்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்நிலையில், ரஷ்ய பயணத்தை முடித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தன் ரயிலில் நேற்று நாடு திரும்பினார்.
முன்னதாக, ரஷ்யாவின் ரஸ்கி தீவில் உள்ள பெடரல் பல்கலைக்கு சென்ற கிம் ஜாங் உன், அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த பயணத்தில், ரஷ்யா – வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement