ஷியோபூர்: ‘சிவிங்கி புலி மறுவாழ்வு திட்டம் துவங்கி ஓராண்டான நிலையில், பல்வேறு சவால்களுக்கு நடுவே வெற்றியை தந்துள்ளது’ என, இந்த திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிவிங்கி புலிகள், பல ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்தன.
அவற்றை மீண்டும் வளர்க்கும் திட்டத்தை முன்னெடுத்த மத்திய அரசு, கடந்த ஆண்டு, செப்., 17ல் தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கி புலிகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்தது.
பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி கடந்த ஆண்டு அனைத்து சிவிங்கி புலிகளும் மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
இந்த ஆண்டு பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவில் இருந்து, இடமாற்றம் செய்யப்பட்ட, 12 சிவிங்கி புலிகளும் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. பெண் சிவிங்கி புலி ஜூவாலா, கடந்த மார்சில் நான்கு குட்டிகளை ஈன்றது.
இதையடுத்து, மொத்தமாக, 24 சிவிங்கி புலிகள் அங்கு பராமரிக்கப்பட்ட வந்த நிலையில், உடல்நிலை கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகளால் ஒன்பது சிவிங்கி புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவிங்கி புலி மறுவாழ்வு திட்டம் துவங்கி ஓராண்டான நிலையில், பல்வேறு சவால்களையும், அனுபவங்களையும் இந்த திட்டத்தின் வாயிலாக பெற்றுள்ளதாக, இந்த திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிவிங்கி புலி மறுவாழ்வு திட்ட தலைவர் எஸ்.பி.யாதவ் கூறியதாவது:
சிவிங்கி புலிகளை நம் நாட்டிற்கு கொண்டு வந்தது துணிச்சலான முயற்சி. அவற்றை பராமரிப்பது, நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தோம். உரிய அனுபவம் இல்லாததால் ஒரு சில சிவிங்கி புலிகளை இழக்க நேரிட்டது.
இதன் வாயிலாக புதிய பாடங்களை கற்றுள்ளோம். இனி வரும் காலங்களில் தவறுகள் சரி செய்யப்படும். தற்போது பராமரிக்கப்படும் சிவிங்கி புலிகள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. பல சவால்களை சந்தித்தாலும், இந்த திட்டம் வெற்றியை தான் தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்