அம்பேத்கர் நகர்: உத்தர பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர்கள், சைக்கிளில் சென்ற பள்ளி மாணவியின் துப்பாட்டாவை பிடித்து இழுத்ததில், கீழே விழுந்த அவர், மற்றொரு வாகனத்தில் மோதி பலியானார்.
உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் ஹாரிப்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவியர், பள்ளி முடிந்து சைக்கிளில் நேற்று வீடு திரும்பினர்.
ஹிராப்பூர் மார்கெட் பகுதி அருகே அவர்கள் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், கும்பலாக சென்ற மாணவியரில், பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர்.
இதில் தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி மீது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் மாணவி உயிரிழந்தார்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளிய பைசல், ஷாபாஷ் மற்றும் இருசக்கர வாகனத்தை மோதிய அர்பாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பறித்ததுடன், அவர்களை நோக்கி சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர்.
இதனால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில், மூன்று பேரும் காயம் அடைந்தனர். தற்போது, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement