புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் முர்மு: அமிர்த காலத்தில் பிரதமர்நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை, வலுவான தலைமையால் அனைத்துதுறைகளிலும் இந்தியா முன்னேறிவருகிறது. அவர் ஆரோக்கியமாக வும் மகிழ்ச்சியாகவும் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்.
மத்திய அமைச்சர் அமித் ஷா: புதிய இந்தியாவை வடிவமைக்கும் சிற்பி பிரதமர் நரேந்திர மோடி. சுயசார்பு இந்தியாவை அவர் உருவாக்கி வருகிறார். அரசு, கட்சி சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மோடியிடம் இருந்து நாங்கள் ஊக்கம் பெற்று வருகிறோம்.
காங்கிரஸ் தலைவர் கார்கே: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நிலையான ஆரோக்கியம், நீடித்த ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மத்திய அமைச்சர்கள்: மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமூக வலைதளம் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்,டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா மற்றும் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், அக்சய் குமார், சன்னி தியோல், ஹேமமாலினி, கஜோல், கங்கணா ரணாவத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.