லக்னோ: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சொந்த தொகுதியான லக்னோவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு கோமதி நகரில் நடைபெறும் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோமதி நகர் ரயில் நிலைய பணிகள் திருப்தி அளிக்கின்றன. லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும். ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் இந்த சூப்பர்சோனிக் ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரைப்பகுதிகளில் இருந்தும் ஏவ முடியும். லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுக் கூட பணிகள் விரைவில் முடிவடையும்.
11 திட்டங்கள்: லக்னோவில் இன்னும் 11திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில்லக்னோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ராணுவ தளவாடஉற்பத்திக்கு ஏற்ற சூழலை நாம்உத்தர பிரதேசத்திலும், தமிழகத்திலும் உருவாக்கியுள்ளோம். உ.பி.யில் பாதுகாப்பு தளவாட வளாகம் உருவாக்குவதற்கு 1,700 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியில் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன.
சனாதனத்துக்கு முடிவில்லை: உலகம் ஒரு குடும்பம் என்பதை சனாதன தர்மம் கூறுகிறது. இதற்குஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. உலகில் எந்த சக்தியாலும், அதை முடிவுக்கு கொண்டு வர முடியாது. சனாதன தர்மத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.