விபரீதத்தில் முடிந்த வீலிங் சாகசம் : கை, கால்களில் காயம் : டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம் : கோவையைச் சேர்ந்தவர் 'யூடியூபர்' டிடிஎப். வாசன், 22. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து யூடியூப்பில் பதிவு செய்து பிரபலமானவர். தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். நேற்று மாலை, சென்னையில் இருந்து ஓசூருக்கு, 'யாயாபூசா' என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் செல்லும் போது முன் சக்கரத்தை தூக்கி 'வீலிங்' செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார்.

பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, காஞ்சி புரம் அடுத்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலைக்கவசம் மற்றும் உயிர் காக்கும் உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். இருப்பினும் அவர் கை, கால்களில் காயமடைந்து கட்டு போடும் அளவுக்கு சென்றுள்ளது.

வழக்கு பதிவு
இதற்கிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும்
வாசன் தொடர்ந்து இதுபோன்று ஆபத்தமான முறையில் பைக்கில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரை பார்த்து பல இளைஞர்களும் இதுபோன்று சாகசத்தில் ஈடுபடணும் என்ற விபரீதத்தை இவர் உருவாக்கி வருகிறார். தொடர்ந்து இதுபோன்று சாலை விதிகளை மீறி சாகசத்தில் ஈடுபடும் வாசனின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.