பெங்களூரு, சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்டுள்ள, ‘ஆதித்யா எல்1’ விண்கலம், அறிவியல் தரவுகளை சேகரிக்க துவங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா -எல்1’ விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி-57 ராக்கெட் வாயிலாக, கடந்த 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பூமியில் இருந்து, 125 நாட்கள் பயணம் செய்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘லாக்ராஞ்சியன்’ புள்ளி-யை இந்த விண்கலம் சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட உள்ளது.
அதற்கு முன்னதாக, ‘ஆதித்யா- எல்1’ விண்கலம், 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது, ஐந்து முறை அதன் சுற்றுப்பாதையின் உயரம் அதிகரிக்கப்படுகிறது.
அந்த வகையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் இதுவரை நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘ஆதித்யா -எல்1’ விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்கத் துவங்கி உள்ளதாக இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. பூமியை சுற்றியுள்ள அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை, ஆதித்யா எல்-1 விண்கலம் அளவிடத் துவங்கியுள்ளது.
பூமியில் இருந்து, 50,000 கி.மீ., தொலைவில், ‘ஸ்டெப்ஸ்’ என்ற கருவி செயல்படத் துவங்கியது என்றும், ‘ஸ்டெப்ஸ்’ கருவியின், ‘சென்சார்’கள் அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் துவங்கின என்றும் இஸ்ரோ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு சென்சார்கள் உடைய இந்த கருவி வெவ்வேறு திசைகளிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்