கனவு – 121 | `சிக்கரி பெட் ஃபுட் முதல் பருத்தி டீ பேக் வரை…' | விருதுநகர் – வளமும் வாய்ப்பும்!

விருதுநகர் மாவட்டம்!

விருதுநகர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்று சிக்கரி. `சிகோரியம் இன்டிபஸ்’ (Cichorium intybus) எனும் தாவரப் பெயரைக்கொண்டிருக்கும் இது, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. காபியின் கசப்புத் தன்மையைக் குறைத்து, சுவையைக் கூட்டுவது இந்த சிக்கரிதான். இந்த சிக்கரி தாவரத்திலுள்ள வேரைப் பயன்படுத்தி, செரிமானப் பிரச்னைக்கு மருந்தாக உபயோகிக்கப்படும் `இன்னுலின்’ (Inulin) எனும் புராடக்டைத் தயாரிக்கலாம்.

பொதுவாக, சிக்கரியில் இன்னுலின் எனும் நார்சத்து அதிக அளவில் நிறைந்திருக்கிறது. உதாரணமாக, 100 கிராம் சிக்கரியில் சுமார் 15 கிராம் முதல் 20 கிராம் அளவுக்கு இன்னுலின் நிறைந்து காணப்படும். சிக்கரியிலிருந்து இன்னுலினைப் பிரித்தெடுத்து, அதைத் தனி புராடக்டாக உருவாக்கலாம். இன்னுலினில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானத்துக்கு உதவுகிறது. இன்னுலினை மருந்தாக உட்கொள்ளலாம்.

மருத்துவத்துறையில் இன்னுலின் மருந்தை, `ப்ரீபயோட்டிக்’ (Prebiotic) என, அதாவது, `நுண்ணுயிர்களின் உணவு’ என்று அழைக்கிறார்கள். நமது உடல், இன்னுலினை நேரடியாக எடுத்துக்கொள்ளாது. உடலிலுள்ள இரைப்பையில் நல்ல பாக்டீரியா இருக்கும். இவைதான் பெருமளவில் உணவைச் செரிமானமாக்க உதவுகின்றன. இந்த நல்ல பாக்டீரியா இன்னுலினை உட்கொண்டு வளரும். அந்த வகையில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்து, என்சைம்களை உற்பத்தி செய்து, செரிமானப் பிரச்னை தீர வழிவகுப்பதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும். இதற்கான ஆய்வகம் மற்றும் மருந்துத் தொழிற்சாலையை விருதுநகர் மாவட்டத்தில் நிறுவலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் சிக்கரி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 40 டன் வீதம் ஆண்டொன்றுக்கு 2 லட்சம் டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து தோராயமாக 25 டன் அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ சிக்கரியிலிருந்து சுமார் 175 கிராம் அளவுக்கு இன்னுலினைப் பிரித்தெடுக்கலாம். எனில், 25 டன்னிலிருந்து சுமார் 4.3 டன் அளவுக்குக் கிடைக்கும். இதிலிருந்து, 100 இன்னுலின் காப்ஸ்யூல்களைக் (600 மில்லிகிராம்) கொண்ட பாட்டில்கள் ஏறக்குறைய 73,000 தயாரிக்கலாம். ஒரு பாட்டிலின் விலையைச் சந்தையில் 1,400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்:
(MSME – Micro, Small and Medium Enterprises)

விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சிக்கரியை, செல்லப்பிராணிகளின் செரிமானப் பிரச்னையைத் தீர்க்க உதவும் வகையில் ஒரு புராடக்டைத் தயாரித்து, அதைத் தனி பிராண்டாக உருவாக்கி விளம்பரப்படுத்தலாம்.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணைகளில் பராமரிக்கப்படும் விலங்குகள் ஆகியவற்றுக்குத் தரப்படும் உணவுகளைத் தாண்டி, சில நேரங்களில் அவை வெளியில் வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளை உண்ணக்கூடும். இதனால், செரிமானப் பிரச்னை ஏற்பட்டு, உடல் மற்றும் மனநலன் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்கும் வகையில் செல்லப்பிராணிகளுக்குத் தரும் உணவில், சிக்கரியைக் கலந்து தரும்போது, அந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். சிக்கரியை பிராணிகளுக்கான உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் புராடக்டுகளுடன் சேர்த்துத் தரும்போது, சிக்கரியிலிருந்து இன்னுலினைத் தனியாகப் பிரிக்க வேண்டியதில்லை என்பதால், இதற்கான தொழிற்சாலையை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சிக்கரி, கிலோ ஒன்று 24 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்கப்படுகிறது. சிக்கரியை தனி பிராண்டாக விளம்பரப்படுத்தி, புராடக்டாகத் தரும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்பதால், அதன் வழியே வருமான வாய்ப்பைப் பெறலாம்.

இந்தியாவின் ஜவுளி மையங்களில் ஒன்று விருதுநகர் மாவட்டம். பருத்தி உற்பத்தியில் அதிக அளவில் ஈடுபடும் விவசாயிகளைக்கொண்டிருக்கும் இந்த மாவட்டம், ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் ஏராளமாகக் கொண்டிருக்கிறது. பருத்தி மற்றும் அது சார்ந்த தொழில்களை வளங்களாகக்கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்திக்கொண்டு இங்கே பருத்தியிலிருந்து தேநீர்ப் பைகளைத் தயாரிக்கலாம்.

சந்தையில் தேநீர்ப் பைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் காகிதம் மற்றும் காகிதத்தோடு பிளாஸ்டிக் கலக்கப்பட்ட பைகளையே பயன்படுத்துகின்றன. இத்தகைய பைகள் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடானவை. குறிப்பாக, ஒரு பிளாஸ்டிக் கலக்கப்பட்ட தேநீர்ப் பை, தோராயமாக 10 லட்சம் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களைக் கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. உடல் நலனுக்கு ஒவ்வாத காகிதம், காகிதத்தோடு பிளாஸ்டிக் கலந்த தேநீர்ப் பைகளுக்கு மாற்றாக, பருத்தியில் தயாரிக்கப்படும் தேநீர்ப் பைகளை உற்பத்தி செய்யலாம்.

பருத்தித் தேநீர்ப் பை, எளிதில் மட்கும் தன்மைகொண்டது. அவை எளிதில் கிழியாது என்பதால் உபயோகிக்க எளிதானது. இந்தப் பைகள் ஹைபோஅலர்ஜெனிக் (Hypoallergenic) பண்புகளைக் கொண்டிருப்பதால், இதைப் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படாது. இது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருப்பதோடு, உடல்நலனையும் காக்கும். இதற்கான தொழிற்சாலையை விருதுநகர் மாவட்டத்தில் நிறுவலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 2,70,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சுமார் 375 கிலோ அளவுக்குச் சாகுபடி நடக்கிறது. இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பருத்தியைக் கொள்முதல் செய்துகொண்டு, தேநீர்ப் பைகளைத் தயாரித்து, அதைத் தேயிலை நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, ஆண்டொன்றுக்குப் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.