லண்டன்,
இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்க உதவினார். அதன் பின் பார்மை இழந்து தடுமாறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாடி ரன் மழை பொழிந்த அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். .
ஆனால் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோசமாக செயல்பட்டதால் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் மீண்டும் இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சசக்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் கவுண்டி தொடரின் ஒரு போட்டியில் விளையாட புஜாராவுக்கு அதிரடி தடை விதித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 12 கேரியர் கருப்பு புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதற்கான காரணம், கடந்த வாரம் ஹோவ் நகரில் நடைபெற்ற சசக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகள் மோதிய போட்டியில் சசக்ஸ் அணியைச் சேர்ந்த டாம் ஹெய்ன்ஸ் மற்றும் ஜாக் கார்சன் ஆகியோர் நன்னடத்தையை மீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் அதை கேப்டனாக புஜாரா கட்டுப்படுத்துவதற்கு தவறியதாலேயே இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது கவுண்டி தொடரில் ஒரு அணியில் வீரர்கள் விதிமுறைகளை மீறினால் அதற்கு கேப்டனுக்கும் தண்டனை சேர்த்து வழங்கப்படும் என்ற விதிமுறை இருந்து வருகிறது. அதன் படி புஜாராவை போலவே ஹெய்ன்ஸ் மற்றும் கார்சன் ஆகியோருக்கும் தலா 12 புள்ளிகளும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுவதாக இங்கிலாந்து வாரியம் கூறியுள்ளது.
இதன் காரணமாக செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியில் சசக்ஸ் அணிக்காக கேப்டன் புஜாரா, ஹெய்ன்ஸ் மற்றும் கார்சன் ஆகிய மூவருமே களமிறங்க மாட்டார்கள் என்று அதன் பயிற்சியாளர் டாம் பார்பிரேஸ் கூறியுள்ளார். அதன் காரணமாக அந்த போட்டியில் டாம் அஸ்லோப் சசக்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.