‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிடித்தமான உதவி இயக்குநராக இருந்தவர். படப்பிடிப்பின்போது உயரத்திலிருந்து குதிக்கும் காட்சியில் டூப் போடுவதற்கு மறுப்பு தெரிவித்து தானே குதித்த அவர் முதுகெலும்பில் அடிபட்டு, பாதிக்கப்பட்டு கடந்த முப்பது வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்து இன்று உயிரிழந்திருக்கிறார். ‘என் உயிர் தோழன்’ பாபு பற்றி நாம் அறியாத சில விஷயங்கள் இங்கே…
அலட்சியமாகச் சென்னைத் தமிழ் பேசிக் கடைவாயில் பீடி வலித்துக்கொண்டு, ரிக்ஷா ஓட்டும் பாமர அரசியல் தொண்டன் தருமன்… பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படத்தின் நாயகன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வில்லை என்றாலும், எல்லோர் கவனத்திலும் பேச்சிலும் புகுந்து விட்டார் ‘ தருமன் ‘ அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பாபு. வீடு தேடித் தயாரிப்பாளர்கள் வரிசை வந்தது. அதன் பிறகு பதின் மூன்று படங்களுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் பாபு.
வீடும் மறந்து போனது . நண்பர்களும் மறந்துபோனார்கள். ‘ஷூட்டிங், ஷூட்டிங்’ தான் ! விடியற்காலை மூன்று மணிக்குப் படுக்கப் போனால், ஆறு மணிக்கே ‘புரொடக்ஷன்’ ஆட்கள் மறுபடி எழுப்பிவிடு வார்கள்.மூன்றரை மாதங்கள் இது நடந்திருக்கிறது. உடம்பும் மனசும் சோர்ந்து புண்ணாகிவிட்ட போதும் வலுக்கட்டாயமாக உற்சாகத்தை நிரப்பிக்கொண்டு நடித்திருக்கிறார் பாபு. ‘மனசார வாழ்த்துங்களேன் ‘ படத்துக்காகப் பொள்ளாச்சி பக்கத்தில் சேத்துமடையில் ஷூட்டிங். அன்றும் அதிகாலை மூன்று மணிக்கு ரெடியாகி இருந்திருக்கிறார். இரண்டாவது மாடியிலிருந்து டைவ் செய்ய வேண்டும். ‘லேண்ட்’ ஆகிற இடத்தில் மெத்தென்று வைக்கோலைப் பரப்பி இருந்திருக்கிறார்கள்.
‘வேணாம் பாபு ! டூப் வெச்சிடலாம். எதுக்கு ரிஸ்க்கு…? யூனிட் மொத்தமும் சொல்ல… ‘அப்படிக் குதிச்சா என்னங்க ஆயிடப்போவுது ? என்று பாபு கேட்க. ரெண்டு மூணு எலும்பாவது உடையும் ‘ என்று கூறி இருக்கிறார்கள். “அட , உடையட்டும்பா ! அப்படியாச்சும் ரெஸ்ட் எடுக்க முடிஞ்சா சரி !” இரண்டு தடவை ‘ டைமிங் ‘ பிசகாமல் குதித்துவிட்டார் . மூன்றாவது தடவை குதிக்கும் போது தான் உடம்பு தலைகீழாகத் திரும்பியது. வைக்கோலுக்கு அப்பால் எல்லைச் சுவர் மாதிரி அடுக்கியிருந்த சிமெண்ட் மூட்டைமீது தலை மோதி விழுந்திருக்கிறார் பாபு ! மறுநாள் நடிகருக்குக் காயம் என்று சின்னதாக நியூஸ் வந்தது.1990 -ம் வருடம் டிசம்பர் 9-ம் தேதி நடந்த அந்த ஆக்ஸிடெண்ட்டுக்குப் பிறகு பாபுவை சினிமா வட்டாரம்கூட மெதுவாக மறந்துவிட்டது.
“பாபு படுத்த படுக்கையில் இருக்கிறார். இனி அவர் பிழைப்பதும் நடமாடுவதும் கஷ்டம்! ” என்று நடுநடுவே பேச்சு காற்றில் வந்திருக்கிறது. படுத்த படுக்கையில் இருந்த தன்னைப் பார்க்கவோ, படமெடுக்கவோ பத்திரிகையாளர்களை பாபு அனுமதிக்கவில்லை. பிறகு ஆறு வருடங்கள் கழித்து மொத்த வாழ்க்கையையும் முடக்கிப் போட்ட ஒரேயொரு சண்டைக் காட்சி குறித்து விகடனுக்கு பேட்டி அளித்திருந்த பாபு, ” ஃபர்ஸ்ட்லேர்ந்தே ஆரம்பிக்கறேன். சேலத்துல இருந்து மேற்கொண்டு ஸ்கூல் படிப்புக்கு மெட்ராஸ் வந்ததும் என்னோட குணத்துக்குத் தகுந்த மாதிரி கிடைச்ச நண்பன் ராதா மோகன் . அதுக்கப்புறம் லயோலாவில் சேர்ந்தப்ப எல்லா ஃப்ரெண்ட்ஸும் ஐ .ஏ.எஸ் , ஐ.பி. எஸ் . என்று எதிர்கால லட்சியத்தைப் பத்திச் சொன்னப்பக் கூட நான் சினிமா தான்’னு உறுதியா இருந்தேன்.
நானும் ராதாமோகனும் சேர்ந்தே சினிமாவுக்கு முயற்சி பண்ண ஆரம்பிச்சோம். பாரதி ராஜா சார்கிட்டே நான் முதல்ல அசிஸ்டென்ட்டா சேர்ந்துட்டேன். நான் மெட்ராஸ் தமிழ் பேசற ஸ்டைலைப் பார்த்து, ‘ என் உயிர் தோழன் ‘ படத்தில் எனக்குக் கதாநாயகன் சான்ஸ் கொடுத்தார் டைரக்டர் சார்! படம் ரிலீஸானதும் நிறையப் பேர் வரிசையா வந்து ‘பிச்சிட்டேடா !’ னு தட்டிக் கொடுத்தாங்க . அப்புறம் சான்ஸ் குவிஞ்சது. தலைகால் தெரியாம நான் தான் மிஸ்டேக் பண்ணிட்டேன். நீட்டறவங்க கையிலே இருக்கிற பேப்பர்ல எல்லாம் கையெழுத்துப் போட்டேன். என்னை நானே கையில புடிக்க முடியலே.
அடிபட்டதுமே என்னை ஆடாம அசைக்காம ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் இருக்கணுங்க. அதெல்லாம் பதட்டத்துல யாருக்கும் தெரியல. கோயம்புத்தூர் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்த பிறகு விஷயத்தைக் கேள்விப்பட்டு அம்மாவும் அப்பாவும் பதறி அடிச்சுட்டு ஓடி வந்தாங்க. கழுத்துக்குக் கீழே எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. சுண்டு விரலைக்கூட அசைக்க முடியலே. யூரின் – லெட்ரின் எல்லாத்துக்கும் டியூப்தான்! காலேஜ் படிக்கறப்போ ஒரு தடவை நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட். இன்டென்ஸிவ் கேர் யூனிட்ல வெச்சிருந்தாங்க. பக்கத்து பெட்ல நல்ல பாடி பில்டர் ‘ மாதிரி ஒருத்தரைப் படுக்க வெச்சிருந்தது . தலையை அசைக்க முடியாதபடி, இரும்பு ராடெல்லாம் வெச்சு டைட் பண்ணியிருந்தாங்க .
அப்ப சினிமா ஸ்டண்ட்மேன் அழகு ,அவரைப் பார்க்க வந்தார். ‘ பிரபலமான ஒரு நடிகருக்காக’ டூப்பா நடிச்சாருப்பா. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு’ னு சொன்னார் அழகு . அடுத்த அரைமணி நேரத்துல வார்டில் ஒரே அலறல் சத்தம். அந்த ஸ்டண்ட்மேன் செத்துப் போயிட்டாரு . அந்த ஸ்டண்ட் மேன் எந்த பொசிஷனில் படுக்கையில் இருந்தாரோ. அதே நிலைமையில்தான் இப்ப நாமளும் படுத்திருக்கோம் ‘ னு புரிஞ்சுது. நிச்சயமா சாகத்தான் போறோம். அதைச் சொல்லி அம்மா , அப்பாவைப் பயமுறுத்த வேண்டாம் ‘னு முடிவு பண்ணிட்டேன் . மூணு மாசம் கழிச்சு ஒரு ஆபரேஷன் நடந்தது. தொட்டா உணர்ச்சி தெரியற அளவுக்கு , இடுப்புக்கு மேலே கொஞ்சம் டெவலப் – ஆச்சு. அதுக்குப் பிறகு என்னை மெட்ராஸ்க்குக் கொண்டுவந்தாங்க.
வர்மா!ஆயுர் வேதா! சித்தா ‘ னு எல்லா வைத்தியமும் செஞ்சாச்சு . ஜூனியர் விகடன்ல கொஞ்ச நாள் முந்தி கட்டுரை வந்ததே. கோயம்புத்தூர் மோசடி . டாக்டர் ஜெயக்குமார். அவர்கிட்டே கூடப் போய் மூணு மாசம் இருந்தேன். லட்சக் கணக்கா செலவாச்சே தவிர. அதுக்கப்புறம் இம்ப்ரூவ்மெண்ட் இல்ல. வீட்டுல பக்கத்துல யாரும் இல்லாத நேரத்துல ரொம்பப் பயமா இருக்கும் . கரப்பான்பூச்சி ஒண்ணு என்னோட கால்மாட்டில் போர்வை மேல இருந்து ஏறி என் நெஞ்சுல வந்து நின்னுச்சு ஒரு நாள். மெள்ள மெள்ள ஓடி என் முகத்துக்குப் பக்கத்துல வந்து மீசையை ஆட்டி, ஆட்டிப் பார்த்தது. விரட்டலாம்னாதான், கையிலே பலம் இல்லையே. ரொம்ப நேரம் அப்படியே இருந்துட்டு, என் மூஞ்சியில் ஏறி, காது மடல் வழியா கரப்பான் பூச்சி கீழே இறங்கிப் போயிடுச்சு. ரொம்ப நாள் கழிச்சு, அன்னிக்கு நான் திரும்பவும் அழுதேன் .
‘அம்மா’ என்ற வார்த்தைக்கு எவ்வளவு பெரிய அர்த்தம்னு இந்த ஆறு வருஷத்தில் தெரிஞ்சுக்கிட்டேன் . இருபத்தஞ்சு வயசுக்காரனுக்கு , ஒரு குழந்தைக்குச் செய்யற எல்லாச் சேவகமும் செஞ்சது என் அம்மாதான். அப்படி – இப்படி ட்ரீட்மெண்ட் பண்ணித் தூக்கி நிக்க வெச்சா, அப்படியே நிக்கற அளவுக்கு வந்திட்டேன் . ஒரு நாள் ‘ பிஸியோதெரபிஸ்ட்டா ‘ இருக்கிற என் ஃப்ரெண்ட் தீபக்தான் என்னை நிக்க வெச்சுப் பார்த்துட்டு , ‘டேய் மச்சி! நீ ஸ்டடியா நிக்கறடா.உன்னால் நிச்சயமா நடக்கமுடியும்டா ஆனா, நீதான் எல்லோரையும் ஏமாத்திக்கிட்டிருக்கேடா… ஃபூல்’னு திட்டிட்டுப் போனான் .
அவன் சொல்றாப்ல ‘நாமதான் ஏமாத்திக்கறோம், ஏமாத்தறோம் ‘னு தோணிச்சு . தினமும் வாக்கிங் ஸ்டிக் வெச்சுக்கிட்டு வாக்கிங் போக ஆரம்பிச்சேன். கூடு மாதிரி இருந்த என்னை, எங்க தெருவுல யாருக்கும் அடையாளம் தெரியல . கூடுமானவரைக்கும் விழாமத்தான் நடப்பேன். தவறி விழுந்துட்டா போச்சு. அரை மணி நேரம், ஒரு மணி நேரம்க. அப்படியே ரோட்டுல விழுந்து கிடப்பேன் . யாராச்சும் பார்த்துட்டு வந்து தூக்கி விடுவாங்க .
ஒரு தடவை ரெண்டு நாய்கள் என் மேல் பாய்ஞ்சுடுச்சு விழுந்திட்டேன். அந்த நாய்களுக்கே என்ன தோணிச்சோ விழுந்து கிடந்த என்னைக் கடிக்காம கிட்டே வந்து முகத்தை நக்க ஆரம்பிச்சது. அப்புறம் அந்த வீட்டுக்காரர் வந்து நாய்கள் உள்ளே அனுப்பிட்டு என்னைத் தாக்கி விட்டார். வாக்கிங் போறதை அன்னியோட விட்டுட்டேன். திரும்பவும் வீடு படுக்கை!” பாபுவின் மாமா, பிரபலமான அரசியல் பிரமுகர் – முன்னாள் அமைச்சர் ராசாராம்! சினிமாத்துறை மீது ஆர்வம் கொண்டவர் . சினிமாவில் நடிக்கப்போய் பாபு இப்படி ஆனதில் நொறுங்கிப் போய்விட்டார் ராஜாராம். “அவர்தான் எம்.ஜி.ஆருக்கு ரொம்ப நெருக்கமானவராச்சே. எம்.ஜி. ஆருக்கு ஷாட்டிங்ல அடிபட்ட போது ட்ரீட் மெண்ட் கொடுத்த கேரள ஆசான்களைக் கூட்டிட்டு வந்து என்னைக் காட்டினார் அவங்க நம்பிக்கையா பேசினாங்க.
ஒரே ஒரு ஆசான் மட்டும் ‘தம்பி முதுகெலும்புல அடிபட்டா கஷ்டம் தான் அதைச் சரி பண்ண நம்மிடம் வைத்திய முறைகள் முன்னே இருந்தது . ஆனா அந்த வைத்திய முறைகள் இருந்த ஓலைச்சுவடியெல்லாம் காலப்போக்கில் மறைஞ்சு போயிடுச்சு . நீ குணமடையறது உன்னோட நம்பிக்கையையும் அதிர்ஷ்டத்தையும் பொறுத்ததுதான்னு ஓப்பனா சொல்லிட்டார்’ . குடும்பத்துல எல்லோரும் இடிஞ்சு போயிட்டாங்க . மாமா மட்டும் மனசு தளரல. நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம் என்னைக் கொண்டு போனார்.
பாபுவைப் பரிசோதித்த டாக்டர் ராமமூர்த்தி. ‘பையா, முதுகெலும்பில் இன்னொரு ஆபரேஷன் செய்யணும்டா உனக்கு’ என்று சொல்லிவிட்டு , அதைச் செய்தார் . அதற்குப் பிறகு பாபுவின் உடல் நிலையில் கண்ட முன்னேற்றத்தில் அயர்ந்து ‘This is not Medical, This is Miraclel’ என்று சொன்னாராம் ராமமூர்த்தி. போன தீபாவளி அன்னிக்கு டைரக்டர் ( பாரதிராஜா) சாருக்கு போன் பண்ணினேன் அவரே எடுத்தார் .
‘தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்!’
‘நல்வாழ்த்துக்கள்!’
‘பாபு பேசறேன் சார்!’
‘எந்த பாபு?’
‘சார்! என்ன சார்… உங்க பாபு சார்!’னு சொல்லிட்டு போனை வெச்சிட்டேன் .
நேர்ல அவரைப் பார்க்கணும்னு அப்பவே தோணிச்சு . கிளம்பினேன் . நான் போனப்ப , டைரக்டர் ஏதோ யோசனையில் இருந்தாரு . திரும்பிப் பார்த்துட்டு ‘ஏய் ! யாரப்பா அது?’ன்னாரு தூரத்துலேர்ந்து . நான் அங்கேயே நின்னு சிரிச்சேன் . நின்னு நிதானிச்ச பிறகுதான் என்னை அடையாளம் தெரிஞ்சது . ‘பொல பொல’ன்னு அவர் கண்ணுல தண்ணி வழிஞ்சது. ஓடிவந்து கட்டிப்பிடிச்சுட்டு, ‘பாபு! நம்ப முடியலடா. உன் கஷ்டமெல்லாம் இன்னியோட ஓடிப்போச்சுடா! இனிமே டெய்லி ஆபீஸ் வாடா’ன்னாரு . நாகர்கோவிலுக்கு அவுட்டோர் ஷூட்டிங்குக்குக் கூட்டிக்கிட்டுப் போய்க் கொஞ்ச கொஞ்சமா தெம்பு கொடுத்தாரு.
அவரோட ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு வேணும். இன்னிக்கு நான் பழைய பாபுவா ஓரளவு நடமாடறதுக்குக் காரணமா என் அம்மா, அப்பா, தம்பி , பன்னீர், பிஸியோதெரபிஸ்ட் நாராயணன், டாக்டர்கள் ஸ்ரீதர் ,ராமமூர்த்தினு ஒரு பட்டியலே இருக்கு சார் ! நான் – முதல்ல சொன்னேனில்ல என் ஸ்கூல் காலத்து ஃப்ரெண்டு ராதாமோகன். இப்ப அவன் டைரக்ட் பண்றான் , ஒரு படத்தை. அதுக்கு, அவனும் நானும் சேர்ந்து ஸ்கிரீன் ப்ளே பண்றோம் . டயலாக் நான் எழுதறேன் – படத்துக்குப் பேரு ” ஸ்மைல் ப்ளீஸ் ! “
திடீரென்று சோபாவிலிருந்து எழுந்து நின்றார்.மெள்ள உட்கார்ந்தார் . அப்படியே எழுந்து நின்றார் . முகம் கொள்ளாத சிரிப்போடு ” எப்படி சார். நல்லாயிட்டேனில்லே ! ” கேட்கும்போதே வாசலில் கார் ஹாரன் அடித்தது .“ஸ்டோரி டிஸ்கஷன், கூட்டிட்டுப் போறதுக்கு ஆள் வந்துடுச்சு” கொஞ்சம் தள்ளாடிய போதும் நிதானமாக இரண்டாவது மாடியிலிருந்து கைப்பிடியைப் பிடித்தபடி கீழே இறங்கி வந்து, காரில் ஏறி உட்கார்ந்தார் .
இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத் துல ‘என் உயிர் தோழன் ‘ படத்துல வர்ற ‘ தருமன் ‘ காரெக்டர் மாதிரி ஒரு வேகமான கேரெக்டர்ல நான் நடிக்கற தாகூட நியூஸ் வரும் சார்! என பாபு அன்று அளித்த பேட்டியைப் படிக்கும்போதே கண்கலங்குகிறது.