புதுடில்லி, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பார்லிமென்டின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்களும், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் இருந்து கேபினட் செயலர் அந்தஸ்துக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் மாற்றப்பட உள்ளனர்.
மேலும், இவர்களை தேர்வு செய்வதற்கான குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தற்போது இடம்பெற்றுள்ளனர்.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக, மத்திய அமைச்சர் ஒருவரை பிரதமர் பரிந்துரைக்கும் வகையிலும், மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போதைக்கு, இந்த மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த, அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது, கொடுக்கப்பட்ட, எட்டு மசோதாக்கள் பட்டியலில், இந்த மசோதா இடம்பெறவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement