நாடாளுமன்றத்தால் இஸ்லாமிய மத தாய்மார்கள், சகோதரிகள் நீதி பெற்றனர் – பிரதமர் மோடி

டெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இன்று இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை மதியம் 1.15 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2.15 மணிக்கும் கூட உள்ளன.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்வதற்கு முன் பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் இன்று புதிய எதிர்காலத்தை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்க உள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிமொழியை நிறைவேற்ற நாம் இன்று உறுதியுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் செல்கிறோம்.

இஸ்லாமிய மத தாய்மார்கள், சகோதரிகள் இந்த நாடாளுமன்றத்தால் நீதி பெற்றனர், முத்தலாக் தடை சட்டம் இங்கு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றியுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலான சட்டங்களை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம். நாடாளுமன்றத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ நீக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு சட்டமும், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒவ்வொரு விவாதமும், நாடாளுமன்றம் கொடுத்த ஒவ்வொரு சமிக்ஞையும் இந்தியர்களின் லட்சியத்தை ஊக்கப்படுத்தும். இது நமது பொறுப்பும் ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பும் ஆகும். எந்த சீர்திருத்தம் மேற்கொள்ளும்போதும் இந்திய லட்சியம் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.