பாராளுமன்றத்தின் புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பதவிச் சத்தியம் செய்தைத் தொடர்ந்து அவர் தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜீ.கே.ஏ.சமிந்த குலரத்ன 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (19) மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
சமிந்த குலரத்ன அவர்கள் ருவன்வல்ல ராஜசிங்ஹ மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதுடன், திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமானிப் பட்டதாரியாவர். அத்துடன், அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பக்கிம்ஹாம்ஷெயர் பல்கலைக்கழத்தில் வணிக முகாமைத்துவம் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமாதாரியாவார். 2005ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், 2016ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணிகள் கவுன்சிலின் (Bar Council) உறுப்பினருமாவார்.
சிரேஷ்ட சட்டத்தரணியான சமிந்த குரலத்ன அவர்கள் பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியின் முதற்கோலாசானின் செயலாளர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர், எதிர்க்கட்சித் தலைவரின் மேலதிக செயலாளர், லண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் அமைச்சு ஆலோசகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 20 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார். இவர் அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றியும், அரசாங்க நிர்வாகம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அனுபவம் உள்ள சிரேஷ்ட அதிகாரியாவார்.
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இலங்கை வங்கி, மேர்ச்சன்ட் வங்கி, MBSL காப்புறுதி நிறுவனம், கிரான்ட் ஓரியன்டல் ஹோட்டல் (GOH), வரையறுக்கப்பட்ட மகநெகும எமியூல்சன் பிரைவட் லிமிடட், Colombo Financial City Foundering Ltd உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றிலும் பணிப்பாளர் சபையில் பணியாற்றியுள்ளார்.
மேலும், குலரத்ன அவர்கள் லண்டனில் உள்ள ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அமைச்சு ஆலோசகராகக் கடமையாற்றிய காலத்தில் தூதரக அதிகாரிகளின் பழைமைவாய்ந்த சங்கமான கென்சியூலர் அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது தெற்காசிய இராஜதந்திரியாகவும் விளங்குகின்றார்.
சட்டத்தரணி யோக்யா குலரத்னவை திருமணம் செய்துகொண்ட சமிந்த குலரத்ன இரண்டு ஆண்பிள்ளைகள் மற்றும் ஒரு பெண்பிள்ளையின் அன்புத் தந்தையாவார்.