புதுடில்லி, விநாயகர் சதுர்த்திக்கு, ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ பயன்படுத்தி, விநாயகர் சிலைகள் செய்யவும், அதை விற்பனை செய்யவும் தடை விதித்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
மேல் முறையீடு
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று முன் தினம் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் வாதிட்டதாவது:
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்ய தடை இல்லை என்றும், அதை இயற்கையான நீர் நிலைகளில் கரைக்க மட்டுமே தடை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை செயற்கை நீர் தொட்டிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே, தடையை விலக்கி உத்தரவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
மனு தள்ளுபடி
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி வாதிடுகையில், ”பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்ய தடை விதித்தது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்கள் பயன்படுத்தி செய்யப்படும் சிலைகளையும், இயற்கை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது,” என, வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்