1915 மே மற்றும் ஜூன் மாதங்களில் வடக்கு பிரான்ஸில் உள்ள ஃபெஸ்ட்பெர்ட் (Festubert) மற்றும் கிவென்சை (Givenchy) ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் ஒரு விசேஷம் உண்டு. இந்தப் போர்களில் பள்ளங்கள் வெட்டி, அவற்றில் பதுங்கியபடி போர் நடத்திய ஜெர்மானியர்களை வெளியேறவைத்து பின்வாங்கச் செய்ய வேண்டும் என்பது நேச நாடுகளின் திட்டமாக இருந்தது. விசேஷம்? முதன்முறையாக முதலாம் உலகப்போரில் கனடா பங்கு கொண்டது. என்றாலும் தெளிவான குறிக்கோள் இல்லாததாலும் சரியில்லாத தகவல் தொடர்பு காரணமாகவும் போதிய பீரங்கிகள் இல்லாததினாலும் கனடா நாட்டு ராணுவத்தால் இந்தப் போர்களில் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. இந்த இரண்டே ‘சிறிய’ போர்களில் 2,800 கனடா நாட்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
கனடா ஏன் உலகப் போரில் கலந்து கொள்ள வேண்டும்? இந்தியா கலந்து கொண்ட அதே காரணம்தான். இரண்டுமே அப்போது பிரிட்டிஷ் காலனிகளாக விளங்கின. எனவே பிரிட்டனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கின. இத்தனைக்கும் பிரிட்டனின் காலனி என்றாலும் கனடாவுக்கு வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தவரை சுயாட்சி உரிமை வழங்கப்பட்டிருந்தது.
கனடா நாட்டில் இதற்காக ராணுவத்தில் இளைஞர்களை சேரச் செய்யும் ஒரு பெரும் பிரசாரம் நடந்தது. இதற்கு மிக நல்ல பலன் இருந்தது. பல இளைஞர்கள் தானாக முன்வந்து கனடா பயணப் படையில் (Canadian Expeditionary Force) தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேற்கு முனையில் நடைபெற்ற பல போர்களில் கனடா நாட்டு ராணுவ வீரர்கள் கலந்துகொண்டார்கள். தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் துணிவுக்காக அவர்கள் பாராட்டப்பட்டனர். அதுவும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஏப்ரல் 1917ல் நடைபெற்ற விமி ரிட்ஜ் (Vimy Ridge) போரில் ஜெர்மனியர்களுக்கு எதிராக நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு கனடிய ராணுவ வீரர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர்.
ராணுவம்தான் என்றில்லை. கனடா நாட்டில் இருந்தபடியே பலர் வேறு விதத்தில் போருக்கான பங்களிப்பைச் செய்தார்கள். போருக்குத் தேவையான பல சாதனங்களை கனடா நாட்டுத் தொழிற்சாலைகள் தயாரித்தன. அந்த நாட்டின் பொருளாதாரமே போர்த் தயாரிப்பு சார்ந்ததாக மாறியிருந்தது. போரில் கலந்து கொள்வதற்காக ஆண்கள் பலர் சென்றுவிட, அவர்களின் இடங்களில் பெண்கள் தங்களைப் பொருத்திக் கொண்டு உரிய பணிகளைச் செய்து நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணாமல் பார்த்துக் கொண்டனர். தனது பொருளாதாரத்தைச் சரி செய்து கொண்டதோடு பிரிட்டனின் பொருளாதாரத்துக்கும் அப்போது நிதி உதவி செய்தது கனடா.
முதலாம் உலகப்போரின்போது கனடாவின் பிரதமராக விளங்கியவர் ராபர்ட் போர்டென் (Robert Borden). இவர் கனடாவின் பிரதமராக 1911 முதல் 1920 வரை விளங்கினார். உள்ளூரில் பல எதிர்ப்புகளைத் தாக்குப்பிடித்தபடி போரிலும் இவர் பெரும் பங்கு வகித்தார். எனினும் 1917-ல் இவர் அறிமுகப்படுத்திய ‘கான்ஸ்க்ரிப்ஷன் திட்டம்’ பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டது. அதாவது இளைஞர்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற திட்டம்.
ராபர்ட் போர்டென் பிரதமரான பின் ஆங்கிலேயர்களோடு நெருங்கிய தொடர்பிலிருக்க விரும்பினார். முதலாம் உலகப் போருக்கு முன் பிரிட்டன் மூன்று போர்க்கப்பல்களை உருவாக்குவதற்காக மூன்று கோடி டாலர் தொகையை அளித்தார். அதேசமயம் முதலாம் உலகப் போர் தொடங்கிய முதலிரு வருடங்களிலேயே போர் குறித்த பிரிட்டனின் தீர்மானங்களில் கனடாவுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத் தொடங்கினார். பின்னர் பிரிட்டிஷ் பிரதமரான டேவிட் லாயிடு ஜார்ஜ், இம்பீரியல் வார் கேபினெட் என்ற அமைப்பைத் தொடங்கிய போதுதான் கனடாவுக்கு தன் எண்ணத்தை அதிகாரபூர்வமாக இங்கிலாந்துக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஐ.நா.சபைக்கு முன்னோடியாக இருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பில் கனடாவுக்கு தனித்துவமான உறுப்பினர் தன்மை வேண்டும் என்று மிகவும் போராடினார்.
*********
ஆகஸ்ட் 1, 1915க்குப் பிறகே கலிப்பொலியில் பெருமளவில் எந்தத் தாக்குதலையும் பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை. பொதுமக்கள் வேறு கலிப்பொலி போர் குறித்து பலத்த விமர்சனம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
கலிப்பொலியில் தொடர்ந்து தங்கள் ராணுவத்தை தங்க வைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று பல பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளும் கூறத் தொடங்கினர். பலத்த விவாதத்துக்குப் பிறகு கலிப்பொலியிலிருந்து ராணுவத்தை பின்வாங்க முடிவு எடுக்கப்பட்டது. தவிர மேற்கு முனையில் மேலும் அதிக அளவில் ராணுவத்தினர் தேவைப்பட்டனர்.
அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் அரசு ஜெனரல் சர் இயான் ஹாமில்டன் என்பவரைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சர் சார்லஸ் மன்ரோ என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தியது. அவர் பதவியேற்ற உடனேயே கலிப்பொலியிலிருந்த அன்ஸக் மற்றும் சுவ்லா பகுதிகளிருந்து தங்கள் ராணுவத்தினைப் பின்வாங்கும் ஆணையைப் பிறப்பித்தார். 1915 நவம்பர் 22 அன்று ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. நவம்பர் 13 அன்று ஒரு சிறிய படகில் ஏறி ஃபீல்ட் மார்ஷல் கிச்னெர் கலிப்பொலிக்குச் சென்றார். அங்குள்ள சூழலைக் கணித்தார்.
ராணுவத்தை பின்வாங்கச் செய்யும் போது பெரும் அசம்பாவிதங்கள் நடைபெறுமென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாக பிரிட்டிஷ் ராணுவம் செயல்பட்டது. தாங்கள் பின் வாங்கப் போவதைத் துருக்கியர்களுக்குத் தெரியாமல் பார்த்து கொண்டது. இதன் காரணமாக போர்க்கப்பல்களில் ராணுவத்தினரை ரகசியமாக ஏற்றி வெளியே கொண்டு வர முடிந்தது.
டிசம்பர் 15 அன்று கலிப்பொலியிலிருந்து பிரிட்டிஷ் ராணுவம் முழுவதுமாக வெளியேறியது. இடைப்பட்ட நாள்களில் சுமார் 36,000 ராணுவ வீரர்கள் போர்க் கப்பல்களில் ஏற்றப்பட்டு பிரிட்டனுக்குத் திரும்பினார்கள்.
கலிப்பொலி போரில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நேசநாடுகள் அணியின் ராணுவ வீரர்கள் இறந்தனர். என்றாலும் இந்த வெற்றியை ஓட்டோமான் சாம்ராஜ்யத்தால் பெரிதாகக் கொண்டாட முடியவில்லை. காரணம் இந்த மோதலில் அவர்கள் அணியைச் சேர்ந்த 85,000 பேருக்கும் அதிகமானோர் இறந்திருந்தனர்.